ஆட்டோ விலை ரூ.25 ஆயிரம், அபராதம் ரூ.47 ஆயிரம்: என்ன கொடுமை சார்?
மத்திய அரசு சமீபத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை பல்வேறு மாநிலங்கள் அமலுக்கு கொண்டு வந்த நிலையில், தமிழகத்திலும் விரைவில் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவது, இன்சூரன்ஸ் எடுக்காமல் வண்டி ஓட்டுவது, மது அருந்தி வண்டி ஓட்டும்போது, அதிக பாரத்துடன் வாகனத்தை இயக்குவது, சாலை விதிகளை மீறுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு வழக்கமாக விதிக்கப்படும் அபராதத் தொகையில் இருந்து பல மடங்கு புதிய அபாரத தொகை இருப்பதால் வாகன ஓட்டிகள் மிரண்டு போயுள்ளனர். ஒரு சிலர் பழைய வாகனத்தை வாங்கி ஓட்டி வரும் நிலையில் அந்த வாகனத்தின் மதிப்பை விட அதற்கு விதிக்கப்படும் அபராத தொகை அதிகமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் சேர்ந்த ஹரிஹரன் புக்கன் என்பவர் பழைய ஆட்டோ ஒன்றை ரூபாய் 25 ஆயிரத்திற்கு வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று அவர் ஆட்டோ ஓட்டிய போது குடிபோதையில் இருந்ததாக போக்குவரத்து போலீசார் அவரை பிடித்தனர். வழக்கமாக நூறு அல்லது இருநூறு ரூபாய் கொடுத்தால் போலீசார் விட்டுவிடுவார்கள் என்று தப்புக்கணக்குப் போட்ட ஆட்டோ ஓட்டுனர் காவலர்களிடம் பேரம் பேசினார். ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து காவலர்கள் அவருக்கு 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த வண்டியின் மதிப்பே 25 ஆயிரம் ரூபாய் என்றும், நீங்கள் 47 ஆயிரத்து 500 அபராதம் போடுகிறீர்க்ள் என்றும் வாக்குவாதம் செய்துள்ளார். இருப்பினும் போலீசார் அதை ஏற்றுக்கொள்ளாமல் அபராத்தை கட்டினால் மட்டுமே ஆட்டோவை எடுத்துக் கொள்ளலாம் என்று கறாராக கூறியதால் அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு பெரிய தொகை அபராதம் விதித்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் விதிகளை மீறாமல் வாகனங்களை இயக்குவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே போன்ற ஒரு காட்சியை மகேஷ்பாபு நடித்த ’பரத் என்னும் நான்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.