செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (17:22 IST)

ரயில்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகள்.. ரயில்வே துறை தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் 165 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2017-2019 ஆம் ஆண்டுக்குள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து விவரங்களை அளிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இது குறித்த தகவல்களை ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதன் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 1,672 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 802 சம்பவங்கள் ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் நடந்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 136 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், ஓடும் ரயிலில் 29 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளன.

அதன் படி 2017 ஆம் ஆண்டு ரயில் நிலையங்களில் 41 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், ஓடும் ரயிலில் 10 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளன.

அதே போல் 2018-ல் ரயில் நிலையங்களில் 59 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் ஓடும் ரயிலில் 11 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளன.

மேலும் 2019 ஆம் ஆண்டு மட்டும் ரயில் நிலையங்களில் 36 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், ஓடும் ரயிலில் 8 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளன.