1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (18:07 IST)

பத்தாம் வகுப்பில் 20 மதிப்பெண் எடுத்தாலே பாஸ்: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு.

100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்பது தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இனி தேர்ச்சி மதிப்பெண் 20 ஆக குறைக்க, மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல மாணவர்கள் 35 மதிப்பெண் எடுக்க முடியாமல் திணறுவதால், தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. மேலும், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் கல்வியை கைவிடுவது மற்றும் சிலர் தற்கொலை முயற்சிக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. 
 
இதையடுத்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 35 லிருந்து 20 ஆக குறைக்க மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வி வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. 
 
ஆனால், இந்த தேர்ச்சி விகிதம் பத்தாம் வகுப்புக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பத்தாம் வகுப்பில் 20 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளை தொடர முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran