1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (12:44 IST)

முந்தைய பாஜக ஆட்சியில் 1000 கோடி ஊழல்.? விசாரணை நடத்த கர்நாடகா முதல்வர் திட்டம்.!

Sitharamaya
கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின் போது கொரோனா தொற்றுக்காக செலவிடப்பட்ட பணத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அது குறித்து விசாரிக்க முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
 
கர்நாடகாவில் வீட்டுமனை ஒதுக்கியதில் ரூ.4,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் தனது மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டதாக முதல்வர் சித்தராமையா மீது புகார் எழுந்துள்ளது. மேலும் தன் மீதான விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்ததை எதிர்த்து சித்தராமையா தொடர்ந்த வழக்கு, வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், விசாரணையை தொடர, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.
 
இந்த நிலையில்,  கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில்  கொரோனா நிதியை கையாண்ட விதத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.   கொரோனா தொற்று பரவிய சமயத்தில், ரூ.13,000 கோடி செலவிடப்பட்டதில், சுமார் ரூ.1,000 கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும், பல ஆவணங்களை காணவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 
இது தொடர்பாக நீதியரசர் டி.குன்ஹாவின் அறிக்கையில், ரூ.1,000 கோடி வரையிலான பணம் செலவிடப்பட்டதற்கான ஆதாரமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுக்க முதல்வர் சித்தராமையா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.