வெண்ணிலா கபடிக்குழு 2: திரைவிமர்சனம்

Last Modified வெள்ளி, 12 ஜூலை 2019 (19:35 IST)
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இரண்டாம் பாக திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்து வரும் நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இன்னொரு இரண்டாம் பாக திரைப்படம் 'வெண்ணிலா கபடிக்குழு
பசுபதி ஒரு கபடி வீரர். பல கோப்பைகளை தனது வெண்ணிலா கபடிக்குழுவிற்காக வாங்கி தருகிறார். இந்த நிலையில் ஒரு முக்கிய போட்டியில் விளையாடவுள்ள நிலையில் முந்தைய நாள் இரவில் ஒரு சம்பவம் நடக்கின்றது. இதனால் மறுநாள் கபடி போட்டிக்கு பசுபதி செல்லவில்லை. இதனால் அவரது அணி தோல்வி அடைகிறது. இதனையடுத்து ஊர்க்காரர்களின் வெறுப்பால் ஊரை விட்டே செல்கிறார் பசுபதி. இந்த பசுபதியின் மகன் தான் விக்ராந்த். அப்பாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க அப்பாவுக்கே தெரியாமல் அவரது சொந்த ஊர் செல்லும் விக்ராந்த் அதன்பின் என்ன செய்தார் என்பதுதான் கதை
விக்ராந்த் கபடி வீரர் என்ற கேரக்டருக்கு பொருத்தமான உடலமைப்பை தவிர வேறு ஒன்றுமே அவரிடம் பாசிட்டிவ்வாக தெரியவில்லை. நடிப்பதற்கு பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை

நாயகி அர்த்தனா பானு அழகாக இருக்கின்றார். ஓரளவு நடிக்கவும் செய்கிறார். ஆனால் இந்த படத்தின் மெயின் கதைக்கும் இவருடைய கேரக்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்பதால் இவரது கேரக்டர் படத்தோடு ஒன்றவில்லை
பசுபதி ஒருவர் மட்டுமே படத்தை ஓரளவு தன்னுடைய நடிப்பின்மூலம் தூக்கி நிறுத்துகிறார். அதேபோல் படத்திற்கு ஓரளவு கைகொடுப்பது கிஷோரின் நடிப்பும்

சூரி, அப்புக்குட்டி ஆகியோர்களின் காமெடி நடிப்பு ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தாலும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. மீண்டும் ஒரு புரோட்டா காட்சியில் சூரி சூப்பராக நடித்துள்ளார். கஞ்சா கருப்பு வழக்கம்போல் வேஸ்ட்
செல்வகணேஷின் இசையில் பாடல் ஒன்று கூட தேறவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு ஓகே ரகம்

சுசீந்திரனின் மூலக்கதையை திரைக்கதை அமைத்து செல்வசேகரன் இயக்கியுள்ளார். இது இவருக்கு முதல் படமாம். கபடி குறித்த கதையில் தேவையில்லாத பசுபதியின் பஸ், டாக்ஸி காட்சிகள், விக்ராந்தின் காதல் காட்சிகள் என முதல் பாதியை சுத்தமாக வேஸ்ட் ஆக்கியுள்ளார் இயக்குனர். இரண்டாம் பாதியிலும் காதல், கபடி , காமெடி என குழப்பி சொல்ல வருவதை கடைசி கால் மணி நேரத்தில் மட்டுமே சொல்கிறார். கபடி காட்சிகளிலும் புதுமை ஒன்றும் இல்லை. ஒரு நல்ல ஸ்போர்ஸ் படத்தில் கமர்ஷியலுக்காக மசாலாவை மிக்ஸ் செய்தால் ஒரு படம் எப்படி சொதப்பலாக இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்

2/5இதில் மேலும் படிக்கவும் :