திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (15:34 IST)

டிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்

ஜெயம் ரவி, நிவேதா நடிப்பில் இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கிய 'டிக் டிக் டிக்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்தது. ஆனால் கோலிவுட் ஸ்டிரைக் உள்பட பல காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்
 
சென்னை எண்ணூர் அருகே நள்ளிரவில் திடீரென ஒரு விண்வெளி கல் விழுந்து பலர் இறந்துவிடுகின்றனர். ஆனால் அதைவிட 100 மடங்கு விண்வெளி கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அந்த விண்கல், தென்னிந்தியாவில் விழும் வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு விழுந்தால் இந்திய வரைபடமே மாறிவிடும் என்பதையும் இந்திய ராணுவம் கண்டுபிடிக்கின்றது. பிரதமர், ஜனாதிபதிக்கு மட்டும் தெரிந்த இந்த விசயம் பொதுமக்களுக்கு தெரியாமல் விண்வெளியிலேயே அதை இரண்டாக பிளந்து சிதறடிக்க வேண்டும் என்பதுதான் ராணுவத்தினர்களின் திட்டம். ஆனால் அந்த விண்கல்லை சிதறடிக்க வேண்டுமானால் அதற்கு அதிகபட்ச அணுசக்தி வேண்டும். பூமியில் உள்ள எந்த நாட்டிடமும் அவ்வளவு அணுசக்தி இல்லை. ஆனால் சீனா, அந்த அணுசக்தியை விண்வெளியில் மறைத்து வைத்துள்ளது. அந்த அணுசக்தியை திருடி, விண்கல்லை சிதறடிக்க வேண்டும் அதுவும் ஏழே நாட்களில் என்ற இலக்குடன் கிளம்புகிறது ஜெயம் ரவி டீம். இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா/ என்பதே இந்த படத்தின் மீதிக்கதை
 
முதலில் திருடன், பின்னர் ஹேக்கர், அதன் பின்னர் கைதி, மேஜிக்மேன், கடைசியில் விண்வெளி வீரர் என ஜெயம் ரவிக்கு ஏகப்பட்ட கெட்டப்புகள். ஆனால் அத்தனையிலும் ஸ்கோர் செய்கிறார் என்பதுதான் அவருடைய பிளஸ். குறிப்பாக பாசமிகுந்த தந்தையாகவும், தனது மகனுக்காக எதையும் செய்வேன் என்று நண்பர்களிடம் கூறும் காட்சியிலும் ஜெயம் ரவியின் நடிப்பு பளிச்சிடுகிறது.
 
நாயகி நிவேதாவுக்கு வித்தியாசமான வேடம். ஹீரோவை காதலித்து மரத்தை சுற்றி பாட்டு பாடும் சாதாரண வேடமாக இல்லாமல் நாட்டையே காக்க முயற்சிக்கும் ஒரு ராணுவ வீராங்கனை வேடம். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்
 
ரமேஷ் திலக் மற்றும் அர்ஜூனன் காமெடி கலந்து நடிப்பும், ஜெயப்பிரகாஷின் வில்லத்தனமான நடிப்பும் அருமை. வின்செண்ட் அசோகனுக்கு இந்த படம் முக்கிய படமாக அமைந்துள்ளது.
 
டி.இமான் தனது 100வது படத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. பாடல் காட்சியிலும், பின்னணி இசையிலும் தூள் கிளப்பியுள்ளார். கிராபிக் காட்சிகள், ஆர்ட் இயக்கம், எடிட்டிங், மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை கச்சிதமாக அமைந்துள்ளதால் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்ற அளவில் இயக்குனர் சக்தி செளந்திராஜனின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் அதே நேரத்தில் திரைக்கதையில் சுத்தமாக லாஜிக் இல்லை. ஒரு கைதேர்ந்த ராணுவ வீரரால் செய்ய முடியாததை ஒரு திருடன் செய்கிறார் என்பதும் அதிலும் சீனாவின் விண்கலத்தில் ஒரு கண்ணாடியை வைத்து ஏமாற்றி ஏவுகணையை திருடுகிறார் என்பதும் நம்பமுடியாத காட்சிகள். மேலும் இந்தியாவின் பாதி பகுதி அழிவதற்கு ஏழே நாள் தான் உள்ளது. ஆனால் அந்த சீரியஸ் இல்லாமல் வெகு இயல்பாக ஒரு திருடனை கண்டுபிடித்து அவருக்கு பயிற்சி கொடுத்து வருவதெல்லாம் லாஜிக் மீறல்களின் உச்சம்.
 
மொத்தத்தில் ஹாலிவுட் தரத்தில் ஒரு விண்வெளி படம் எடுக்க முயற்சித்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து லாஜிக் மீறலை கண்டுகொள்ளாமல் பார்த்தால் இந்த படத்தை ரசிக்கலாம்
 
3/5