ரிட்டையர்ட் தாத்தாக்கள் இப்போதைக்கு அடங்குவதாக இல்லை. ஒன்று, இரண்டு இப்போது மூன்றாவது. டாம் ப்ரவுனின் பிரமாண்ட அட்டை செட்களை இதிலும் பார்னி அண்ட் டீம் அடித்து நொறுக்கி அதகளம் செய்ய நமது கண்ணில் பூச்சி பறக்கிறது.
பார்னி ராஸின் (சில்வஸ்டர் ஸ்டாலோன்) தலைமையில் இயங்கும் குரூப்தான், த எக்ஸ்பென்டபிள்ஸ். அமெரிக்காவுக்கு பிடிக்காத, இந்த உலகுக்கு தீங்கு விளைவிக்கிற நபர்களை, கிளர்ச்சிக் குழுக்களை, கடத்தல்காரர்களை போட்டுத் தள்ள இந்த குரூப்பிடம்தான் அசைன்மெண்ட் தரப்படும். அமெரிக்க அரசோ, சிஐஏ-யோ நேரடியாக பங்காற்றினால் உலக அரங்கில், அது வந்து... என்று அமெரிக்கா கையை பிசைய வேண்டிவரும். காரணம், த எக்ஸ்பென்டபிள்ஸுக்கு தரப்படும் அசைன்மெண்ட் கெட்டவர்களுடன் பல அப்பாவிகளையும் அழிக்கக் கூடியது, கொலாட்ரல் டேமேஜ்.
மூன்றாவது பாகத்தில் எடுத்த உடனேயே தனி ஜெயிலுக்கு மாற்றப்படும் அதி பயங்கர குற்றவாளி, அவனை பாதுகாப்புடன் அழைத்து வரும் தனி ரயில் என்று ஏறி அடிக்கிறார்கள். பார்னியும் டீமும் குற்றாவாளியை ஓடுகிற ரயிலில் இருந்து காப்பாற்றுகிறார்கள். ரயில் ஜெயிலை மோதி உடைக்க அரைநொடிதான் இருக்கிறது. அதற்குள் பார்னி அண்ட் டீமுடன் குற்றவாளியும் ஹெலிகாப்டரில் தப்பிக்க வேண்டும். இங்குதான் முதல் ட்விஸ்ட். ஹெலிகாப்டரில் ஏறாமல் அந்த அரைநொடியில் அரைடஜன் ராணுவத்தினரை போட்டுத்தள்ளி கால் நொடி மீதமிருக்கையில் ஹெலிகாப்டரில் ஏறி தப்பிக்கிறார்.
ஒரு குற்றவாளியை ஏன் பார்னி அண்ட் டீம் தப்பிக்க வைக்க வேண்டும்? டாக் (வெஸ்லி ஸ்னைப்ஸ்) என்றழைக்கப்படும் அந்த குற்றவாளி த எக்ஸ்பெண்டபிள்ஸின் ஓர் அங்கத்தினர். அவரை காப்பாற்றிய கையோடு எத்தியோப்பியாவில் ஒரு ஆயுதபேர பேர்வழியை பிடிக்க டீம் கிளம்புகிறது. ஆற்றின் வழியாக வந்து கப்பலில் ஏறி, கரைக்கு தாவி, கிரேனில் தொங்கும் கண்டெய்னரில் பாய்ந்து, அந்த பேர்வழியை குறி வைக்கும் போது பார்னி தன்னையறியாமல், அடப்பாவி... என்று கூவிவிடுகிறார். அந்த ஆயுதபேர பேர்வழி பார்னி ஏற்கனவே கொன்றுவிட்டதாக நினைத்த அவர்களின் எக்ஸ்பென்டபிள்ஸின் எக்ஸ் டீம் மெம்பர் ஸ்டோன் பேங்க்ஸ் (மெல் கிப்ஸன்).
அரை மணிநேரம் நடக்கும் சண்டையின் முடிவில் பார்னிக்குப் பதில் அவரது டீம் மெம்பர் ஒருவரை சாவடி அடித்துவிடுகிறார் ஸ்டோன் பேங்க்ஸ்.
எவ்வளவு நாளைக்குதான் இந்த தாத்தாக்களே அடாவடி செய்வார்கள் என்ற ரசிகர்களின் சலிப்பு ஸ்டாலோனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஸ்டோன் பேங்க்ஸை போட்டுத்தள்ள தனது பழைய நண்பர்களை விடுத்து புதிதாக ஒரு யங் டீமை தேர்வு செய்கிறார். அப்போதே, இந்த யங் டீம் மண்ணைக் கவ்வும், கடைசியில் தாத்தாக்கள்தான் பேங்க்ஸை காலி செய்து யங் டீமையும் காப்பாற்றப் போகிறார்கள் என்பதெல்லாம் தெரிந்துவிடுகிறது. அதன் பிறகு ஆப்கானிஸ்தானில் ஒரு பாழடைந்த பங்களாவை பீரங்கி, துப்பாக்கி, ஏவுகணைகள் என சகல ஆயுதங்களையும் வைத்து அடி அடியென்று அடித்து நொறுக்க, சுபம்.
முந்தைய பாகங்களைப் போலவே டன் கணக்கில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்தும் எக்ஸ்பென்டபிள்ஸுக்கு எதுவும் ஆவதில்லை. அவர்கள் சுடும் ரவைகளில் ஒன்றுகூட வீணாவதுமில்லை. இந்த பாகத்தில் ஹாரிஸன் போர்ட், மெல் கிப்சன், ஆண்டனியோ பான்டரஸ், வெஸ்லி ஸ்னைப்ஸ் புதிதாக இணைந்திருக்கிறார்கள். கையில் துப்பாக்கி இருந்தும் ஹீரோவை சுடாமல் ஒண்டிக்கு ஒண்டி பார்ப்போம் என்று வெற்று சவடால்விட்டு சாகிற பத்தொன்பதாம் நூற்றாண்டு வில்லனாக மெல் கிப்ஸன்.
ஹாரிஸன் போர்ட் அவ்வப்போது, எனக்கு அவன் உயிரோடு வேணும் என்பதோடு சரி. கிளைமாக்ஸில் ஒரு ஹெலிகாப்டரில் வந்து தன் பங்குக்கு கொஞ்சம் நொறுக்குகிறார். அர்னால்டுக்கு ஸ்டாலோனை பிக்கப் ட்ராப் செய்யும் வேலை. டயலாக் எல்லாம் கிடையாது ஒரேயொரு நாள் வந்து சண்டையிட்டுப் போங்க என்று ஜெட் லீயை அழைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஜேசன் ஸ்டெதம் மட்டும் அதிக நாள் கால்ஷீட் தந்திருக்கிறார். வெஸ்லி ஸ்னைப்ஸின் அறிமுகம் அட்டகாசம். கிடா வெட்டுற கத்தியில் தாடியை ஷேவ் செய்வது, கட்டிடங்களுக்கிடையே தாவுவது என்று அவரது எபிஸேnட் முழுக்க சாகசம்தான்.
பெண் வாசனையே இல்லாத படமா என்று யாரும் திருஷ்டி கழிக்கக் கூடாதே. யங் டீமில் பாரில் பவுன்சராக இருக்கும் ஒரு பெண்ணையும் சேர்த்துக் கொள்கிறார் ஸ்டாலோன். எத்தியோப்பியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்காவுக்கு அலர்ஜியான நாடுகளாக தேடிப்பிடித்து படமாக்கியிருக்கிறார்கள். முன்பெல்லாம் குண்டு தீர்ந்ததும் துப்பாக்கி தூக்கி எறிந்துவிடுவார்கள் (துப்பாக்கி என்ன யூஸ் அண்ட் த்ரோவா?) இதில் காரியம் முடிந்ததும் ஹெலிகாப்டரை குண்டு வைத்து தகர்த்துவிடுகிறார் ஸ்டாலோன். அடுத்த பாகத்தில் தூங்கி எழுந்ததும் வீட்டை வெடி வைத்து தகர்ப்பார்களோ என்னவோ.
இதுவரை வந்த மூன்று பாகங்களில் இரண்டாவதுதான் பெஸ்ட். அதற்கு காரணம் படத்தை இயக்கிய சைமன் வெஸ்ட். கான் ஏர் போன்ற அட்டகாசமான ஆக்ஷன் படங்களை இயக்கியவர். மூன்றாவது பாகத்தை ரெட் ஹில் என்ற ஒரேயொரு படத்தை இயக்கிய பாட்ரிக் க்யூக்ஸ் (Patrick Hughes) இயக்கியிருக்கிறார். ஸ்டாலோனின் திரைக்கதைக்கு இதற்கு மேல் என்ன முக்கினாலும் எதுவும் செய்ய முடியாது.
த எக்ஸ்பென்டபிள்ஸ் 3 அமெரிக்காவில் வருகிற 15 ஆம் தேதியும், இந்தியாவில் இந்த மாதம் 22 ஆம் தேதியும் வெளியாகிறது. கார்கள், பீரங்கிகள், கட்டடங்கள் விதவிதமாக நொறுங்குவதை பார்க்க இதுவொரு நல்ல வாய்ப்பு.