ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ள 150வது படம் நிபுணன். அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் நிபுணன் படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிறப்பு புலனாய்வுக் குழு தலைவராக உள்ளார் அர்ஜூன். சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அதனை விசாரிப்பதற்குள் டாக்டர் ஒருவர் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இந்த இரண்டு கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் அர்ஜுன், அவருடைய சிறப்பு புலனாய்வுக் குழுவில் பிரச்சனா, வரலட்சுமி ஆகியோர் அர்ஜுனுடன் இணைந்து அந்த கொலைகாரனை கண்டுபிடிக்க உதவி செய்கின்றனர்.
நடந்த இரு கொலைகளை கண்டு பிடிக்க முயலும்போது, மூன்றாவதாக வழக்கறிஞர் ஒருவர் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தும் அர்ஜுனுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, அந்த தொடர் கொலைகாரன் அடுத்ததாக குறிவைத்திருப்பது அர்ஜுனைதான் என்பதையும், அதற்கான காரணம் என்னவென்பதையும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
அர்ஜூன் கொலைக்காரன் தன்னை குறி வைப்பதற்கு காரணம் என்ன? உயிரிழந்த மூன்று பேருக்கும், தனக்கும் என்ன தொடர்பு? அந்த சீரியல் கில்லர் யார்? அவனை கைது செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதையாகும்.
அர்ஜுன் அதிரடியான, சுறுசுறுப்பான போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வலம் வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், ஒரு கணவனாக, அப்பாவாக, அண்ணனாக, தோழனாக இளமையாக நடித்திருக்கிறார்.
அர்ஜுனின் சிறப்பு புலனாய்வுக் குழுவில் உள்ள பிரசன்னா தனது கதாபாத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவரது உடைகளும், பேச்சும் என ஒரு போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் கதையை தேர்ந்தெடுத்து. இறுதி வரை சஸ்பென்ஸ் வைத்திருந்து, எதிர்பாராத கிளைமாக்ஸ் அமைத்திருப்பது எதிர்பாராதது.
வரலட்சுமி சரத்குமாருக்கு இப்படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதனை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். வைபவ் அர்ஜூனுக்கு தம்பியாக வந்தாலும் சிறு சிறு ரோல்கள் மட்டுமே. தனக்கே உரிய இயல்பான ஸ்டைலில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் தொடர் கொலையை மையமாக வைத்து மாறுபட்ட கதைக்களத்தில் த்ரில்லுக்கு பஞ்சமில்லமல் காட்சிகளை கொடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன். அர்ஜுனை மையப்படுத்தி காட்டியிருப்பதால் மற்ற கதாபாத்திரங்களை தூக்கி சாப்பிட்டு வுடுகிறார் என்றே சொல்ல வேண்டும். சீரியர் கில்லர் குறித்த சஸ்பென்சை கடைசியில் காட்டியிருப்பது சிறப்பு. அது யார் என்ற சஸ்பென்ஸ், படம் பார்க்கும் அனைவரையும் எதிபார்க்க வைக்கிறது.
எஸ்.நவீனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அருமை. தீம் மியூசிச், பேக்ரவுண்ட் பிளே, ஹைப் சீக்குவன்ஸ் என அனைத்திலும் பொருந்துமாறு இசையமைத்துள்ளார் நவீன். இயக்குனர் அருண் வைத்யநாதனின் இரண்டு வருட முயற்சியை பாராட்டலாம். கதையாக்கம், காட்சிகள் நகர்த்தும் விதம் என படம் முழுக்க எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.
அர்ஜூன் தனது 150-வது படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரம், ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், போலீஸ் உடை அணியாமல் வரும் அவரது லுக்கும், உடைகளும் அவரை ஒரு ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரியாக காட்டுகிறது. பொதுவாக ஆக்ஷன் படங்கள் என்றாலே அர்ஜுன் காட்சிகளுடன் ஒன்றிவிடுவார். இந்த படத்திலும் அப்படிதான் நடித்துள்ளார்.
ஆக்ஷன் கிங் என்பதை நிரூபிக்கிறார். மொத்தத்தில் `நிபுணன்' நிரூபிக்கிறான்.