செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (23:55 IST)

தோனி கபடிக்குழு: திரைவிமர்சனம்

தமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் சமீபகாலமாக அதிகம் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில் நாளை வெளியாகவுள்ள இன்னொரு விளையாட்டு படம் தான் 'தோனி கபடிக்குழு

அபிலாஷும் அவருடைய நண்பர்களும் தீவிரமான தோனி ரசிகர்கள். கிரிக்கெட் விளையாட்டையே முழு நேர பொழுதுபோக்காக கொண்டவர்கள். பெற்றோர்கள் திட்டினாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளளயாட்டை இவர்கள் தங்கள் உயிருக்கு நிகராக கருதி வரும் நிலையில் திடீரென இவர்கள் ரெகுலராக விளையாடும் மைதானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அபிலாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் அந்த மைதானத்தை தாங்களே விலைக்கு வாங்க முடிவு செய்கின்றனர். அதற்காக அவர்கள் எடுக்கப்படும் முயற்சிகள் அதில் ஏற்படும் தடைகள், இதில் கபடி விளையாட்டு எப்படி புகுந்தது என்பதை விளக்குகிறது இந்த படத்தின் மீதிக்கதி

புதுமுகம் அபிலாஷ் நடிப்பு செயற்கைத்தனமாக உள்ளது. அநியாயத்திற்கு நல்லவராக நடித்துள்ளார். அதிகமாக அறிவுரை வழங்குகிறார். கபடி விளையாட்டு குறித்து அவர் ஆவேசமாக பேசும் வசனங்கள் காமெடியாக உள்ளது. அடுத்த படம் நடிப்பதற்குள் இன்னும் அவர் நடிப்பு பயிற்சியை மேற்கொள்வது பார்வையாளர்களுக்கு நல்லது

நாயகி லீமா அழகாக உள்ளார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல புதுமுக வரவு. நடிப்பும் ஓகே. இருப்பினும் இந்த படத்தில் அவரது நடிப்பை அதிகம் வெளிப்படுத்தும் காட்சிகள் குறைவு. நடிகை சீதா போல் ஹோம்லி லுக் இவரது சிறப்பு

காமெடி கேரக்டரில் நடித்திருக்கும் தெனாலி நடிப்பு ஓகே என்றாலும் அவரையும் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். மற்றபடி அனைத்து நடிகர்களும் புதுமுகமாக உள்ளனர். ஒருவருக்கும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் நடிக்க  வாய்ப்பு இல்லை

மகேந்திரன் இசையில் 'இது ஜெயிக்க போகிற கூட்டம்' மற்றும் 'இவ ஒரு கள்ளக்குறிச்சி' ஆகிய இரண்டு பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது. பின்னணி இசையும் ஓகே

தமிழர்களின் விளையாட்டான கபடிக்கு தமிழர்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நல்ல கருத்தை  சொல்ல வந்த இயக்குனர் ஐயப்பன் அதற்கான அழுத்தமான காட்சிகளை வைக்க தவறிவிட்டார்.. பெரும்பாலான காட்சிகள் நாடகத்தில் வருவது போன்று செயற்கைத்தனமாக உள்ளது. ஆளாளுக்கு அறிவுரை கூறுவதும் எரிச்சலை தருகிறது

மொத்தத்தில் கபடி விளையாட்டின் முக்கியத்துவத்தை கூற இயக்குனர் எடுத்த முயற்சிக்கு மட்டும் பாராட்டுக்கள்

2.25/5