1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. Appa venampa review

அப்பா வேணாம்ப்பா - விமர்சனம்

அப்பா வேணாம்ப்பா
படம் எப்படி? தொழில்நுட்பம் சிறப்பாக இருக்கிறதா? என்பதெல்லாம் அப்புறம். எடுத்துக் கொண்ட கதைக்காக ராவாக ஸாரி... ராயலாக ஒரு சல்யூட் வைக்கலாம் வெங்கட்ரமணனுக்கு. இவர்தான் படத்துக்கு ஆக்ஷன் கட் சொன்னவரும், படம் நெடுக கட்டிங்காக குடித்து தள்ளியவரும்.
டாஸ்மாக்கினால் சீரழிந்துபோன ஆயிரக்கணக்கான குடும்பத்தலைவர்களின் பிரதிநிதிதான் படத்தின் ஹீரோ வெங்கட்ரமணன். அவரது கட்டிங் வெறியால் குடும்பத்தை பிரிகிறார். நண்பர்களை இழக்கிறார். டாஸ்மாக் வாசலில் மானம் மரியாதையையும் ஏலம் விடுகிறார். கடைசியில் அவர் திருந்தினாரா குடும்பத்துடன் இணைந்தாரா என்பது கதை.
 
இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் பத்து லட்சம்தானாம். இருக்கட்டுமே. பலகோடி செலவு செய்து எடுக்கும் படங்களைவிட இது சிறப்பாகவே இருக்கிறது. மதுவை மறக்க சபரிமலைக்கு மாலையிடுவதும், மாலையானதும் கைகள் நடுங்க மீண்டும் மதுவைத் தேடிப் போவதும் உள்ளது உள்ளபடியான நிஜம். தெய்வகுத்தம் என்று மனைவி சொல்வதை போதை மனம் கேட்கவா செய்யும்.
 
அளவுக்கு மீறிய குடி ஒருவனின் குடும்பத்தை மட்டுமில்லை அவனது மானத்தையும் காவு வாங்கும் என்பது நெத்தியடி. குடிக்கு அடிமையானவர்களை மது அடிமைகள் மறுவாழ்வு இல்லங்களில் எப்படி மீட்டெடுக்கிறார்கள் என்பதை டீட்டெயிலாகவே சொல்கிறார்கள். குடிப்பவர்கள் பார்க்க வேண்டிய விஷயம்.
 
நெடுந்தொடர்களை ஞாபகப்படுத்தும் இயக்கமும், டாக்குமெண்ட்ரித்தனமும் படத்தின் மைனஸ். என்னதான் கதை நாயகனாக இருந்தாலும் பிரேமுக்கு பிரேம் வெங்கட்ரமணனின் முகத்தையே பார்ப்பது சலிப்பாகதான் இருக்கிறது.
 
குடிகுடியை கெடுக்கும் என்று எழுதி வைப்பதற்குப் பதில் இந்தப் படத்தைப் போட்டுக் காண்பித்தால் சிலராவது திருந்த வாய்ப்புள்ளது.