60 வயது மாநிறம்: திரைவிமர்சனம்

Last Modified சனி, 1 செப்டம்பர் 2018 (08:17 IST)
தரமான குடும்பப்பாங்கான திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கி வரும் ராதாமோகன் அவர்களின் இன்னொரு படைப்பு தான் '60 வயது மாநிறம்". தந்தை, மகன் உறவின் புனிதத்தை கூறும் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

ஞாபகமறதி நோயால் அவதிப்படும் பிரகாஷ்ராஜை ஒரு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வேலைநிமித்தமாக மும்பை செல்லும் அவரது மகன் விக்ரம்பிரபு, விடுமுறை கிடைத்ததால் தந்தையை பார்க்க சென்னை வருகிறார். தந்தைக்கு உடை வாங்க வெளியே அழைத்து செல்லும் விக்ரம்பிரபு, தன்னுடைய அலட்சியத்தின் காரணமாக அவரை தொலைத்துவிடுகிறார். தொலைந்து போகும் பிரகாஷ்ராஜ், கூலிக்கு கொலை செய்யும் சமுத்திரக்கனி குரூப்பிடம் எதிர்பாராமல் இணைகிறார். இவர்கள் அனைவரும் போலீஸ் கெடுபிடி காரணமாக குமரவேல் வீட்டில் தங்குகின்றனர். பிரகாஷ்ராஜ் உள்பட அந்த வீட்டில் உள்ள அனைவரையும் கொன்றுவிட்டு மும்பைக்கு தப்பிச்செல் என சமுத்திரக்கனிக்கு உத்தரவு வர, சமுத்திரக்கனி என்ன செய்தார்? பிரகாஷ்ராஜை தேடும் விக்ரம்பிரபு அவரை கண்டுபிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை

60வயது முதியவராக, ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டவராக மிக இயல்பாக நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சமுத்திரக்கனியை தனது மகனாக நினைத்து அவர் பேசும் வசனங்கள், இந்துஜாவிடம் தனது காதல் கதையை கூறும் நெகிழ்ச்சி, வெள்ளை நாய் கருப்பு நாய் கதையை கூறி அதில் எந்த நாய் வெற்றி பெற்றது என்று கூறும் பாணி, பார்வையாளர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

விக்ரம்பிரபு இந்த படத்தில் ரொம்பவே அடக்கி வாசித்துள்ளார். தந்தை அருகில் இருக்கும்போது அவருடைய அருமை, பெருமைகளை புரிந்து கொள்ளாமல் , அவரை தொலைத்த பின்னர் அவரையே நினைத்து நினைத்து உருகும் நடிப்பை மிக இயல்பாக கொடுத்து நடிகர் திலகம் வாரிசு என்பதை நிரூபித்துள்ளார்.


டாக்டராக நடித்துள்ள இந்துஜா, தமிழுக்கு கிடைத்த இன்னொரு நல்ல நடிகை. இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ஒரு கவிதை போல் உள்ளது. குறிப்பாக ஞாபகமறதி நோயாளிகளிடம் இவர் காட்டும் பாசம், அக்கறை ஆச்சரியப்படும் வகையிலான நடிப்பு

சீரியஸாக சென்று கொண்டிருக்கும் படத்தை கொஞ்சம் கலகலப்பாக்குவது குமரவேல்-மதுமிதா ஜோடிதான். சமுத்திரக்கனிக்கு கொலைகாரன் கேரக்டர் என்றாலும் இந்த கல்லுக்குள்ளும் ஒரு ஈரம் இருக்கின்றது என்பதை இயக்குனர் மிக அழகாக இவருடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலம். இவருடைய பின்னணியால்தான் பல காட்சிகள் உயிர் பெறுகிறது. பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது.

இயக்குனர் ராதாமோகன் தந்தை-மகன் உறவை மிக நெகிழ்ச்சியாக கூறும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் தந்தையின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். அதிலும் மருத்துவமனையில் ஞாபகமறதியால் அவதிப்படும் ஒரு பெண் இன்னொருவரை தனது கணவர் என நினைத்து புலம்புவதும் அதனை அவருடை உண்மையான கணவர் அருகில் இருந்து பார்க்கும் காட்சிகள் நிச்சயம் அனைவரையும் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள். ஆனால் இப்படியொரு பாசக்கவிதையில் கொலை, கடத்தல், போலீஸ் விசாரணை போன்ற காட்சிகள் தேவையா? என்று நினைக்க வைக்கின்றது. இருப்பினும் தந்தையின் அருமையை புரிந்து கொண்டவர்கள், இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயம் இந்த படத்தை ஒருமுறை பார்க்க வேண்டும்

ரேட்டிங்: 4/5


இதில் மேலும் படிக்கவும் :