சைக்கோ - A Perfect Cinema
FILE
ஹிட்ச்காக்கின் படங்களுக்கும் பிற த்ரில்லர் படங்களுக்கும் பல்வேறு வேற்றுமைகள் உள்ளன. திரைப்படம் குறித்த ஹிட்ச்காக்கின் பார்வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் உள்ள வித்தியாசமாக அதனை சொல்லலாம். ஹிட்ச்காக்கின் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அவரது சினிமா அணுகுமுறை ஓரளவு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
1. அழுத்தமான தடுமாற்றமில்லாத கதை சொல்லல் முறை
ஹிட்ச்காக் தீவிரமான கதை சொல்லி. பெட்ரோ அல்மதோவரைப் போன்று நெடிய காலங்களை உள்ளடக்கிய திரிதிரியாக பிரிந்து செல்லும் விஸ்தீரணமான கதை சொல்லி அல்ல ஹிட்ச்காக். அவரது பாணி வேறு. நெடிய காலங்களை கொண்ட கதைகளை அவர் பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. அதிகபட்சம் ஒரு நெடிய சம்பவமாகதான் அவரது கதைகள் இருக்கும். சைக்கோ படத்தில் ஒரு இளம் பெண் பணத்தை திருடிச் செல்கிறாள். பாதி வழியில் கொல்லப்படுகிறாள். கொல்வது யார் என்பதில் சந்தேகம். ஓரிரு நாட்களில் மர்மம் விலகிவிடுகிறது. அவ்வளவுதான் கதை. ஒரே வாரத்தில் நடந்து முடிகிற கதை. பிளாஷ்பேக் கிடையாது, சைக்கோ என்றில்லை பெரும்பாலும் எந்தப் படத்திலும்.
FILE |
எனில், ஹிட்ச்காக்கை தீவிரமான கதை சொல்லி என்று சொன்னது, அவர் கதை சொல்லும் முறையை வைத்து. காலம், இடம், கதாபாத்திரங்களின் பின்புலம், சொல்ல வருவதில் உள்ள தீர்க்கம் இவையே கதையின் தீவிரத்தை நிர்ணயிக்கின்றன. கதை நடக்கும் இடத்தையும், சூழலையும் பார்வையாளன் மனதில் பதியும் விதத்தில் காட்சிப்படுத்துவதில் ஹிட்ச்காக் நிபுணர். சைக்கோவில் பணத்தை திருடிச் செல்லும் மேரியன் கிரேன் தனது காரை விற்க முயலும் காட்சியில் போலீஸ்காராரின் கார் அவளை பின்தொடர்ந்து வரும். விற்பனை நிலையத்தின் எதிரே காரை திருப்பி எதிர்பக்கம் நிறுத்துவார் போலீஸ்காரர். மேரியன் கிரேன் கிளம்ப ஆயத்தமாகையில் மீண்டும் காரை திருப்பி மோpயன் கிரேன் இருக்கும் இடத்துக்கு வருவார். மிக துல்லியமாக போலீஸ்காரர் எங்கிருந்து எங்கு காரை நகர்த்தி செல்கிறார் என்பதை காட்சிப்படுத்தியிருப்பார் ஹிட்ச்காக்.
நார்மன் பேட்ஸுக்கு தெரியாமல் மேரியன் கிரேனின் சகோதரி அவனது வீட்டில் ஒவ்வொரு அறையாக சோதனையிடுவதையும், திடீரென நார்மன் பேட்ஸ் அங்கே வருகையில் அவள் ஒளிந்து கொள்வதையும் நேர, இட பிசகில்லாமல் காட்சிப்படுத்தியிருப்பார்.
கால, இடத்துக்கு இணையானது கதாபாத்திரங்களின் பின்புலம். சந்திரமுகியின் நாயகன் ஒரு மருத்துவர். அவரது மருத்துவ திறமைகளைப் பற்றி சொல்ல கதையில் இடமில்லை. அதனால் ஒரு கதாபாத்திரம் அவரின் திறமைகளை பட்டியலிட்டு சொல்லும். பெரும்பாலும் இந்த எளிமையான உத்தியைதான் இயக்குனர்கள் பயன்படுத்துவார்கள். ஹிட்ச்காக் இந்த சிக்கலை மேதமையுடன் எதிர்கொள்கிறார்.

