1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Sasikala

கேரள ஸ்பெஷல் பழம் பொரி, புட்டு கடலை கறி செய்யலாம் வாங்க...

இது கேரள ஸ்பெஷல். நம் ஊரில் வாழைக்காய் பஜ்ஜி போல கேரளாவில் வாழைப்பழத்தில் போடப்படும் பஜ்ஜிதான்  பழம்பொரி. இதை ஏத்தங்காய்ப் பணியாரம் என்றும் சொல்வார்கள்.

1. பழம் பொரி 
 
தேவையான பொருட்கள்:
 
மைதா - 1/2 கிலோ
நடுத்தரமான நேந்திரம் பழம் - 5
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 
செய்முறை:
 
பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
 
மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.
 
2. புட்டு கடலை கறி
 
புட்டு - தேவையான பொருட்கள்
புட்டு மாவு (அரிசி மாவு) - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
தேங்காய் துருவியது - தேவையான அளவு
 
புட்டு செய்முறை:
 
அரிசி மாவோடு போதுமான உப்பு சூடான தண்ணீர் சேர்த்து கைவிரல்களால் நன்கு பிசைய வேண்டும். இந்தப் புட்டு செய்வதற்கு நீங்கள் பாரம்பரிய புட்டுக்குடத்தைப் பயன்படுத்த வேண்டும். அந்த உருளை வடிவமான குழலில் முதலாவது ஒரு கரண்டி துருவிய தேங்காய் போட்டு அதன் மீது பிசைந்த அரிசி மாவினைப் போட வேண்டும்.

ஒரு கையளவு போட்டதும் மறுபடியும் தேங்காய் துருவல் பின்னர் பிசைந்த அரிசி மாவு என புட்டுக் குழல் நிரப்பும் வரை மாறி மாறி போட வேண்டும். பின்னர் புட்டுக் குடத்தின் மீது புட்டுக் குழலை நன்கு மூடி வைத்து அவிக்க வேண்டும். நீராவி வெளிவரும் வரை நன்கு கவனமாக அவிக்க வேண்டும். மூன்று நிமிடங்களில் புட்டு தயார். புட்டுடன் சாப்பிட கடலை கறி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
 
2. புட்டு கடலை கறி
 
கடலை கறி செய்ய தேவையான பொருட்கள்:
 
கருப்பு கொண்டை கடலை - 1கப் (ஊற வைத்து அதோடு உப்பு சேர்த்து வேக வைத்தது)
சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
தேங்காய் (துருவியது) - 1 கப்
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
வற்றல் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
தேங்காய் (துண்டுகள்) - ¼ கப்
தக்காளி (நறுக்கியது) - ¼ கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
கடுகு
மிளகாய் வற்றல்
இஞ்சி-பூண்டு (விழுது)

 
கடலை கறி செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும், அதோடு கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அவற்றை விழுதாக அரைக்கவும்
 
ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும், பின்னர் கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு அது பொரியத் தொடங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அதன் பின்னர் வெங்காயம் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை, அவித்து வைத்த கொண்டைக் கடலையை அத்தோடு சேர்த்து போதுமான நீர் உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.
 
பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அவித்து வைத்த கொண்டை கடலையோடு சேர்த்து மேலும் நன்கு வேக விடவும். நன்கு வெந்ததும் நீங்கள் இப்போது நறுக்கிய கொத்தமல்லி தூவி இதனை அலங்கரித்து புட்டுவோடு சேர்த்து பரிமாறலாம். இந்த புட்டுடன் கடலை கறி சேர்த்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும்.