1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (15:56 IST)

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலா..? தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்..!

Rajiv Kumar
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர், சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மக்களவை தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளப்படும் என்றார். பணம் பட்டுவாடா, மது விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்
 
சி-விஜிலி என்ற செயலி மூலம் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் புகார் பெற்ற 100 நிமிடங்களுக்குள் அது தொடர்பாக ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ராஜீவ் குமார் கூறினார்.
 
மேலும் மாநிலங்களுக்கு இடையே சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும்  இணைய பணபரிவர்த்தனைகள் குறித்தும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
பதற்றமான தொகுதிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவ படைகள் நிறுத்தப்படும் என்றும் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் என அனைத்து வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார்.
 
ஜிஎஸ்டி அமைப்பு மூலம் நுகர்வோர் அதிகம் வாங்கும் பொருட்கள் குறித்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதிக் கொண்டுள்ளது என்று ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார்.
 
தேர்தல் நேரத்தில் மாலை 5 மணிக்கு மேல் வாகனங்கள் மூலம் ஏடிஎம்களில் பணம் நிரப்ப அனுமதி இல்லை என்றும் தேர்தலுக்கு ஏழு நாட்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
தேர்தல் நடத்தி விதிகளை அமலானதும் ஆன்லைன் பணம் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என்றும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளின் சின்னங்கள் மாற்றுக்குரியதே என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார்.