வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (08:17 IST)

வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல், சேரன் மாநகர், விளாங்குறிச்சி, மசக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ....
 
மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்றதும் தமிழகத்தில் ஊழல் செய்து வரும் திமுகவினர் தண்டிக்கப்படுவார்கள்,
 
தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் கருத்துக்கள் ஒடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறினார்.
 
மேலும், தமிழகத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருவதாகவும், பாஜகவிற்கு ஆதரவாக உள்ள தொழில்துறையினர் மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
 
தனது செல்போன் உரையாடல்களும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் உரையாடல்களும் காவல்துறையால் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
தொடர்ந்து பேசியவர், கோவையை மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், கோவையில் பாதுகாப்பான சாலைகள், சுத்தமான குடிநீர் ஆகியவை பாஜக ஆட்சிக்கு வந்ததும் உறுதி செய்யப்படும் எனவும், விவசாயம் மேம்படுத்தப்பட்டு, கோவையின் தொழில்துறை வளர்ச்சி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லப்படும் எனவும் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.
 
வாக்குக்கு பணம் கொடுப்பது கொடுத்த கேள்விக்கு பதில் அளித்தவர்,
 
பாஜகவினர் அல்லது பாஜக சார்பில் யாரும் வாக்குக்கு பணம் கொடுத்தால் நேரடியாக புகார் அளிக்கலாம் எனவும், தமிழகத்தில் தேர்தலில் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு கோவை மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் எனவும் அண்ணாமலை பதிலளித்தார்.