செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (10:40 IST)

கிரண்பேடி பற்றி தரக்குறைவாக பேசிய நாஞ்சில் சம்பத் – 3 பிரிவுகளின் கீழ் வழக்கு !

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குறித்து இழிவாகப் பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ள நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

நாஞ்சில் சம்பத் மதிமுகவில் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்தார். வைகோவுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மதிமுக வில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். அங்கே அவருக்கு மேடைப் பேச்சாளராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவராகவும் வேலைக் கொடுக்கப்பட்டது.

அவரும் அதிமுக மேடைகளிலும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளிலும் அதிமுக சார்பாகப் பேசி மற்றக் கட்சிகளை தெறிக்க விட்டார். ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறது டிடிவி அணியில் சிறிதுகாலம் இருந்து பின்பு அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் தேர்தலை அடுத்து இப்போது திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து புதுச்சேரியில் நாஞ்சில் சம்பத் கடந்த 27-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். தவளக்குப்பம் பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்தார். அப்போது ‘இந்தியாவிலேயே 22 மாநிலங்களில் பாஜக கவர்னர், இங்கே ஒரு அம்மா கிரண்பேடி. அவர் ஆணா என்றும் தெரியாது, பெண்ணா என்றும் தெரியாது. என்ன அட்டகாசம், நான் கேட்கிறேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா நீங்கள்?’ என மிக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

நாஞ்சில் சம்பத்தின் இந்தப்பேச்சு சர்ச்சைகளைக் கிளப்பியது. இதுகுறித்து பாஜகவின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் மாநில தேர்தல் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் ஆதாரமாக சம்பத்தின் பேச்சு அடங்கிய சிடியை அளித்தார். மேலும் இதுசம்மந்தமாக மற்றொருப் புகாரும் டிஜிபி சுந்தரி நந்தாவிடம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நாஞ்சில் சம்பத் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பெண்ணின் பாலினம் சம்பந்தமாக கொச்சைப்படுத்துதல், பெண்ணின் தன்மான உணர்வுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.