செவ்வாய், 19 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (23:09 IST)

ஒருவரின் திறமைக்கு அங்கீகாரம்! சிறப்புக் கட்டுரை

(யாப்பிலக்கணம் :அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
நல்ல தொன்றே நாம்நினைக்க
நல்ல வைகளே நடந்திடுமே
எல்லைச் சாமி என்பதிங்கு
நாமெல் லோரும் வணங்கிடுமோர்
குலதெய் வமென்று கொண்டாலும்
உள்ளத் திலேநல் லெண்ணமில்லா
விட்டால் எல்லாம் பாழாகிடும்!
சொல்லும் செயலும் முக்கியமென்று
வல்ல வனிட்ட நாமத்தைத்
தொழுதி டுமோமே வாழ்நளெல்லாம். ( சினோஜ் மரபுக் கவிதைகள்)
மனைவிக்கு கணவன் கட்டிய மஞ்சல் தாலியுடன் கொடுக்கும் உயர்பட்ச அங்கீகாரம்தான் தாய்மை; மகனுக்கு அன்னை பத்துமாதம் வயிற்றில் சுமந்து கருவுயிருடன் கொடுக்கும் அங்கீகாரம் இவர் என் மகன் என்று வாய் மணக்கக்கூறும் உற்சாக வார்த்தைகள்; அதே மகனுக்கு தந்தைகொடுக்கும் அங்கீகாரம் அவனுக்குரிய பெயருக்கு முன் கம்பீரமாகத் தாங்கிநிற்கிற அவருடைய பெயரின் முதலெழுத்தெனும் இனிஷியல்.
வெட்டிவைத்த வெங்காயத்தை ஒருநாள் வைத்தால் அது அழுகிப்போய்விடும். ஆனால் ஒருவருடைய திறமையென்பது ஆயிரம் காலமானாலும் மாறிப்போகாது. ஆனால் அவர் அத்திறமையை ஒரு புடைப்புசிற்பம் போல் அதை எதோவதொரு விதத்தில் வெளிப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அது காலக்கரையானால் அரிக்கப்பட்டும், நம்மைவிட திறமைசாலிகளிருப்பின் இத்திறமைகள் ஆற்றிலடித்துச்செல்லப்படும் ஓரிலைபோல் அடித்துச் செல்லப்படும். இல்லையென்றால் காலப்போக்கில் நன்றியை மறந்துசெல்லும் மக்களின் மனோபாவத்தைபோல் அதுவும் மறக்கடிக்கப்படும்.
இந்த உலகல் நாள்தோறும் பல அரிய பெரிய திறமைகளையும் அசாத்தியமாக வல்லமைபொருந்திய மக்களையும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலத்தொலைக்காட்சிகளான ஏ.எக்ஸ்.என், இ.எஸ்.பி.என். டிஸ்கவெரி போன்றவற்றில் எத்தனையோ விதமான தொழில்நுட்ப வல்லுநர்களைப் பார்க்கிறோம். அவர்களின் சாகசத்தைக் கண்ணுற்று மகிழ்கிறோம். கைதட்டி சிரித்து ஆர்ப்பரித்து, ரசித்துப் பொழுதைப் போக்குகுறோம்.
இது அன்றாடம் நடந்துவருகிறவொன்றுதான்.
ஆனால் அதேபோல் கண்ணுக்குத் தெரியாமல் இந்த ஊடகவெளிச்சக் கீற்றுபடாமல் இன்னும் தன் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்குமா என்று எத்தனையோ இளைஞர்கள், இளைஞிகள் காத்துக்கிடக்கின்றதை நம்மால் பார்க்கமுடிகிறது.
கோடிகளில் இருந்தால்தான் ஒருவரின் திறமை இங்கு மதிக்கப்படுமென்றாலோ அல்லது சிறந்த ஒரு சிபாரிசு இருந்தால்தான் ஒரு மிகப்பெரும் சாதனைநிகழ்த்துவோரின் திறமைகள் அம்பத்திற்கு வரும் என்று யாரேனும் இறுமாப்புக் கொண்டிருந்தாலோ அவர்களின் எண்ணம் என்பது காற்றில்லாத பலூனைப் போலிருக்கிறது என்பேன் நான்.
உலகக்கிரிக்கெட்டில் சாதனைநாயகன் சச்சினுக்கு வாய்ப்புக் கொடுத்தவர்களும், கவியரசு கண்ணதாசனுக்கு முதல்படத்தில் பாடலெழுத வாய்ப்புக் கொடுதவர்களும், மூன்று கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் வாய்ப்புக் கொடுத்தவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாய்ப்புக் கொடுத்தவர்களும், நேற்றும் இன்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் போட்டியிலேயே( ஒருநாள்-2 விக்கெட்கள், டி-20 மூன்று விக்கெட்டுகள்) வீழ்த்தி இந்திய வெற்றிக்குக் காரணமாக நடராஜுக்கு வாய்ப்புக்கொடுத்தவர்கள் இவர்களின் திறமைச்செல்வத்தை மட்டும்தானே கருத்தி ஒரு நல்ல மேடையை கொடுத்து அதில் அவர்களின் திறமையை விளையச் செய்தனர். அவர்களும் தங்களுக்குக் கிடைத்தவாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, சாதித்துக்காட்டினார்கள்.
இதேபோல் எத்தனையோ திறமைச்செல்வன்கள் பாரத நாட்டிலும் பரந்திருக்கிறார்கள்…
அவர்களுக்கு அருகில் இருப்போரோ சாமரம் வீசவில்லையென்றாலும்கூட அவர்களின் திறமைகளின் வீச்சைக் கவனிக்காமல் அவர்களைத் தம் பார் வையில் உற்றுநோக்கி, தம் கறபனையில் அவர்களைப் பற்றிப் புரியாமல் சில கற்பனைக் கற்பிதங்களைத் தமக்குத்தாமே கற்பித்துக்கொண்டு கணிதச் சூத்திரங்களைப் போல் அதை அவர்கள் மீது திணிக்கவோ… அவர்கள் நம்மைவிட வளர்ந்துவிடுவர்களோ என்ற வயிற்றெரிச்சலிலும் பொறாமைப் பொருமலில் ஒதுக்கிவைக்கவோ, அல்லது அவர்களுக்கு நமது அங்கீகாரத்தை கொடுக்கத் தயங்கவோ வேண்டாம்! ஒருசிலர் அந்தமுட்டுகட்டுகளைத் தாண்டி வெற்றிவீரர்களாகவும், சாதனைத் திலகங்களாகவும் உலாவருகின்றனர். ஆனால் ஒருசிலருக்கு அவர்களின் எதிர்மறை விமர்சனமே பெரியதாகி அவர்கள் தாழ்வுமனப்பான்மை கொள்ளவும் ஒரு காரமாகிறது என்பதிங்கே கவனிக்கத்தக்கது.
காற்றை வேண்டாம் எனத தள்ளிவைக்கமுடியாது. நெருப்பில்லாமல் புகையாது. புகையை மூடிமறைக்கமுடியாது. ஆகாயத்திலுள்ள சூரியனை மேகக்கையால் மறைக்கவே முடியாது என்றபோது நமது இரண்டுகைகளாலா அதை மறைத்துவிட முடியும்? கையில் இண்டுஇடுக்கிலுள்ள ஓட்டை ஒடிசல் வழியாகவாவதும் தலைகாட்டிவிடும் அல்லவா அந்தச் சூரியக் கிரணம்.
அதுபோல்தான் ஆற்றலுள்ளர்களின் திறமையும். அவர்களுக்கு கனன்றுகொண்டிருக்கும் எரிமலையை சாதாரண விளக்காக நினைத்து அணைத்திட வழிதேட வேண்டாம்!
அதற்கு நாம் திரிதான் கொளுத்த முடியவில்லையே அதனால்…. அந்தத் திறமையெனும் லாவாக்களை அதன் போக்கிலாவது செல்லவிடுவோம். அது தனக்கென்று தனிவழிகளை உருவாக்கித் தனக்கு வேண்டியவைகளைத் தானே அபகரித்துக்கொள்ளும். கூடுமானவரை தன் இயலாமைகளைக் கலைந்து தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும்.
நான் செய்ய வேண்டியதெல்லாம் அடுத்தவர்களைக் குறைகூறாமல் நம் ஆற்றலையோ அல்லது மற்றொரு திறமையுள்ள ஒருவரின் ஆற்றலை அவர்களின் மீது திணிப்பதில் ஆர்வம் காட்டாமல், அவர்களின் திறமையில் விளையும் முயற்சிக் கிளைகளில் மீது குறையெனும் மண்ணள்ளிக் கொட்டாமலிருப்பதே ஆகும்.
ஒரு செடியை நட்டவில்லையென்றால்…மண்ணில் வளரும் மரத்தை முறிப்பதில் நமக்கு உரிமையில்லை. ஒருவரை ஊக்குவிக்கத்தெரியவில்லையெனில் அவரைப் பற்றிப் புறம்பேசிக் குறைகூறிவதிலும் அர்த்தமில்லையென்றே கட்டியங்கூறுகிறேன்…
அவரவர் வேலையை அவரவர் பார்த்தாலே பாதிப்பிரச்சனைகள் இங்குத் தலைவிரித்துத் தாண்டவம் ஆடாது என்பது என் சொந்தக் கருத்து.
ஏற்புடையோர் ஏற்கலாம்..ஏற்காததாயின் விமர்சனமென்ற ஏற்றம் கட்டி இங்கு கருத்து நீரிறைக்கலாம்…
முக்கியமாக ஒருவரை மனம் திறந்து பாராட்டுவது என்பது வாழும் பயிர்க்கு நீரூற்றுவதுபோல் ஒருவித ஈகைப்பண்பே ஆகும். காசு பணத்தைவிட அது கோடி மடங்கு உயர்ந்ததாகும்.
அதுவே போதும்….அப்படிச் சாதனைபுரிய காத்திருப்போரின் சுழலும் திறமைக்கோள் என்பது தமிழ்மாதம் ஒன்று பிறந்தால் ஒவ்வொரு கோள்மீது மோகம்கொண்டு தாவும் சூரியனைப் போல் அது ஒன்றிலிருந்து பத்தாகப் பெருக்கி விஸ்வரூமெடுக்கவைக்கும் ஆற்றலையும் உள்ளடக்கியது என்பதால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அப்படிப்பட்டவர்களைக் கண்டால் வயது பேதமின்றி அவர்கள் மீது அந்த ஒரே ஒரு கனிவான புன்னகை மற்றும் ஈரமான பாரட்டும்தான்…
இதென்றே போதும்…இதுவே இன்றைய இயந்திர லோகத்தில் நாம் காணும் அவசரகால ஜீவகாருண்யமாகும்…
தான் காண்பவர் எல்லோரிடத்திலும் ஒருவர் தம் திறமையை மேடைநாடகம் போல பட்டவர்த்தனமாக வெளிச்சம்போட்டுக் காண்பித்து என்னை நம்புங்களென்று நிரூபிக்கவேண்டிய அவசியம் திறமைசாளிகளுக்கு இல்லை. ஆற்றலை மேகம்போல் பருவக்காலத்தில் மட்டுமே பயன்படுத்தவேண்டும்…
இல்லையென்றால் ஸ்போர்ட் காரை இந்தியச் சாலைகளில் ஓட்டுவதுபோலவும் பருவம் தவறிய மழைபோலவும் ஆகிடுவோம்.
நாம் சொல்வது சரிதானே!!
அன்புடன் சினோஜ்
02- டிசம்பர்-2020