வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : திங்கள், 27 பிப்ரவரி 2023 (23:48 IST)

எதையும் சாதிக்கலாம்-சினோஜ் கட்டுரைகள்

youth
இந்த பூமி அற்புதமானது. எத்தனை கோடி உயிர்களின் காலடிகளை தினமும் தன் தலையின் மீது தாங்கிக் கொண்டிருக்கிறது.   நமக்கு வேண்டியவர்களின் நினைப்பே கூட நமக்கு ஒரு நாளில் சுமையாகும்போது, இந்த பூமியானது வேண்டியவர்களின் வேண்டாதவர்கள் என எந்தப் பேதமும் பார்க்காது, அது அனைவரும் சுமந்துவருவது ஆச்சர்யத்திற்குரியதுதான்.

இந்தப் பூமி அழகானது என்று கூறினாலும், இந்த உலகம் என்பது நாம் காணும் விதத்தில்தான் அமைகிறது.

தினமும் நல்லதே நடக்கும் என்று நினைத்து நல்லதைச் செய்பவருக்குக் கூட சில நேரங்களில் தீமை நடக்கலாம்! தீமையே நினைத்து கெடுதல் செய்து கொண்டிருப்பவனுக்கு நல்லது நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், இவை எதுவும் எப்போதும் நிலையானதல்ல.

நல்லதைச் செய்பனுக்கு  தீமை வருவதென்பது அவனை மேலும், சோதித்து, அவன் இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் மனதளவில் தயாராகுவதற்குத்தான்.

தீயவன் சில நேரங்களில் கெடுதலுக்குச் சந்தோஷம் அடைந்து தீமைகளின் பலனை புசிப்பானேயாகிலும், அவன் அதற்கான பலனை அடைந்தே தீருவார். இதற்குத்தான், கெடுவார் கேடு நினைப்பார் என்று முன்னோர் கூறினர்.

யாராலும் வீழ்த்தமுடியாத ராவணனைப் போன்ற பராக்கிரமசாலியும் இங்கில்லை; எல்லோர் வீழ்த்தக் கூடிய படுஎளியவனும் இங்கில்லை; அவருக்குக் காலம் வகுத்திருக்கிற விதிப்படிதான் வாழ முடியுமென்ற கட்டுக்கதைகளையும், நமக்கெதிராக மலட்டுச் சாபத்தையும், புறந்தள்ளிவிட்டு, விதியை நமது மதியால் வெல்ல வேண்டும்.

ஒரு விதைக்குள் ஒரு மரம் மட்டுமல்ல கோடி மரத்திற்கான விருட்சங்கள் அடங்கியுள்ளதைப் போன்று நமக்குள்ளும் ஏராளமான திறமைகள் அடங்கியிருக்கிறது.

தொட்டதெல்லாம் துலங்க வேண்டுமானால், முதலில், நம் திறமைகளைக் கண்டெடுத்து, அதில் ஆழங்கால் பட வேண்டும்!

பிறருக்கு மட்டும் எல்லாம் கைவந்த கலையாகிவிடுகிறது எனக்கெல்லாம் ஏன் இப்படி அமைவதில்லையென்று நமக்குள் நாம் ஏன் புழுங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

சிலர், நமக்கு எத்தனை திறமையிருந்தாலும், அதை உதாசீனம் செய்து, நம்மைத் துச்சமாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கு நாம் பதில் அளித்துக் கொண்டிருக்கும் நிமிடங்களைக் கடந்து, நம் செயல்களால் அவர்களுக்குத் திறமையை நிரூபிக்க வேண்டும்.
காய்ந்த மரம் மீதுதான் கல்லடி படும்!....

தமிழக முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்கள் வக்கீல் படிப்பு முடித்த பின்னர், அவரை  ஜூனியராகச் சேர்த்துக் கொள்ள யாரும் முன்னவரவில்லை; அவரே தனக்குத்தானே தன் திறமையை வளர்த்துக்க்கொண்டு அத்துறையில், சாதித்தார்.

நம்மை வளரவிடக்கூடாது என்று மற்றவர்கள் செய்கின்ற முயற்சியால் மட்டும் நம் வளர்ச்சிகள் தடைபட்டு விடுமா?

இன்று 800 கோடி மக்களின் காலடித்தடங்களால் இந்தப் பூமியென்ன எடைதாங்காமால் நீருக்குள் மூழ்கிய கப்பல் மாதிரி உள்ளுக்குள் அமுங்கிவிட்டதா?

ஆதியில் இருந்து தோன்றிய ஆகாயம் சூரியச் சூட்டில் என்ன கருகிவிட்டதா?

மேகம் தாகத்திற்கு உறிஞ்சிய நீரினால், கடலென்ன தன்னியல்பில் சுருங்கிவிட்டதா?

பல போர்களைச் சந்தித்தும் இப்பூமியென்ன புத்தெழு பெற்று அந்த போர்ச்சூழல் தடங்களை துடைத்துவிட்டு, மீண்டும் எழுச்சி பெறவில்லையா?

இதேபோல் எல்லாம் நமக்குள் தான் இருக்கிறது.

நாம் வீழ்வதும் வாழ்வதும் நம் எண்ணங்களைப் பொறுத்துத்தான்.


கவலை எனும் முதலைகள் வந்து நம்மைத் திண்ணப் பார்ப்பதற்குள், சுதாரித்துக் கொண்டு நாம் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராக வேண்டும்.

வெள்ளமோ,புயலோ, நில நடுக்கமோ எது வந்தாலும், மனிதன் அறியல் விஞ் ஞானத்தின் மூலம் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும்போது, எந்த கருவிகளும் இல்லாமல், பறவைகளும், விலங்களும் இயற்கையை உற்று நோக்கி அதனிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு  உத்தியை நாமும் துணையாய் கொண்டால், நமக்கு எதிர்வரும் ஆபத்தையும்,  நண்பர்கள் மாதிரி பேசும்  வஞ்சகத்தையும், துரோகளின் சதித்திட்டங்களையும், படுபாதகர்களின் கன்னிவலைகளையும், உண்மையான தோழமைகளின்  உறவையும், உறவுகளின் பாசத்தையும் நாம் விரைவில் கண்டுகொள்ள முடியும்!

எண்ணற்ற காரியங்கள் முன்பு இருந்தும், நாம் நிம்மதியாய் இரவில் தூங்குவதில்லையா?

அதுபோல், எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்ற மனதிடமும், தைரியமும்,செஸ்ஸில் அனைத்துக் காய்களை இழந்தாலும் ராணி மட்டும் இருந்தால் போதும் என்பது மாதிரி இது நம்மை இங்கிருந்து ஒருபடி முன்னாள் நகர்த்திச் செல்லும்!

உலகில் உள்ள மனிதர்கள் பலவிதம்! ஒவ்வொருக்கும் ஏற்ப  நம்மால் மாறிக் கொண்டே இருக்க முடியாது! ஆனால், நமக்கென்று ஒரு கொள்கை மற்றும்  இயல்பைக் கொண்டியங்கும்போது, யாராலும் நம்மை மாற்றவோ, நம்மை பவீனப்படுத்தவோ முடியாது.

நாம் வீழ்வதும் வாழ்வதும் நம் கையில் தானுள்ளது.

#சினொஜ்