வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By VM
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (12:15 IST)

'சிப்' இல்லாத கார்டு மூலம் இனி ஏடிஎம்-இல் பணம் எடுக்க முடியாது

'சிப்' இல்லாத ஏடிஎம் கார்டு மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ  முடியாது . பழைய கார்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து விட்டு புதிய கார்டுகளை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது 


 
மோசடி புகார்கள் அதிகரித்து வந்ததால், சிப், இல்லாத ஏடிஎம் கார்டுகள் ஜனவரி 1ம் தேதி முதல்  செல்லாது  என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இதனால் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஏடிஎம் கார்டுகளை கொடுத்து , சிப் உள்ள புதிய கார்டுகளை பெற்று விட்டனர். இன்னும் புதிய ஏடிஎம் கார்டுகளை பெறாமல் உள்ளனர். அவர்களது டெபிட்,  கிரிடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை . 
 
குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 
இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-
 
‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ‘ஸ்வைப்’ செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.
 
எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து ‘சிப்’ வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
 
இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும் இவ்வாறு அவர் கூறினார்.