வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:54 IST)

அமேசான் ப்ரைமுக்கு எதிராக இலவச வீடியோ சேவை – ஃப்ளிப்கார்ட் அதிரடி

எதிர்வரும் விழாக்காலத்தை முன்னிட்டு பயனாளிகளை ஈர்ப்பதற்காக இலவச வீடியோ சேவையை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க வால்மார்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஃப்ளிப்கார்ட். இந்தியாவில் மிகப்பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேசன்களில் முக்கியமான இடத்தை ஃப்ளிப்கார்ட் வகித்து வருகிறது. தற்போது அமேசான் ப்ரைம் போல வீடியோ சேவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் அமேசானுடன் போட்டி போட இருக்கிறது ஃப்ளிப்கார்ட்.

அமேசான் ப்ரைமில் இணைய வருடத்திற்கு 999 ரூபாய் கட்ட வேண்டும். இதன்மூலம் அமேசான் ப்ரைமில் உள்ள அனைத்து திரைப்படங்களையும், இணைய தொடர்களையும் பார்க்க முடியும். மேலும் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிவரி, ஆர்டர் செய்த அடுத்த நாளே டெலிவரி செய்வது போன்ற இன்ன பிற வசதிகளும் உண்டு.

ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் என்ற வசதிமூலம் இலவச டெலிவரி, உடனடி டெலிவரி போன்றவற்றை ஃப்ளிப்கார்ட் வழங்கினாலும் அந்த சலுகை எல்லா பொருட்களுக்கும் கிடைப்பது இல்லை. இதனால் இந்தியாவில் அதிகம் உபயோகிக்கப்படும் ஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேசன்களில் அமேசான் முதலிடத்தில் உள்ளது.

தொடரும் மாதங்கள் இந்தியாவில் பண்டிகைகள் அதிகம் நடைபெறும் என்பதால் ஆன்லைன் விற்பனையும் சூடுபிடிக்கும். இதனால் மக்களை கவர்வதற்காக இலவச வீடியோ சேவையை செப்டம்பர் முதல் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃப்ளிப்கார்ட்.

சொந்தமாக இணைய தொடர், திரைப்படங்களை வாங்கி வெளியிடும் திட்டம் ஃப்ளிப்கார்ட்டிடம் இல்லை. ஏற்கனவே இருக்கும் டிஸ்னி கார்ட்டூன்கள், திரைப்படங்கள், காமெடி தொடர்கள் ஆகியவற்றை தனது சேவையில் இணைத்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்த விடியோக்களை பார்க்கும்போது இடையே ஆஃப்ர்களை காட்டும் விளம்பரங்கள், தனி நபருக்கான எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள் போன்றவற்றை வெளியிட திட்டமிட்டிருக்கிறது. மேலும் ஃப்ளிப்கார்ட் ப்ளஸில் இணைவது மூலம் மின்காசுகள் கிடைக்கும். வீடியோ பார்க்கும்போது இது அதிகரிக்கும். அதை வைத்து ஃப்ளிப்கார்ட் தளத்தில் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இந்த அறிவிப்பானது அமெரிக்காவின் இரண்டு ராட்சத ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் வால்மார்ட் இந்தியாவில் மோதிக்கொள்ள போவதையே காட்டுகிறது. ஏனெனில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆன்லைன் மார்க்கெடிங் நாடாக இந்தியா இருக்கிறது. தற்போது இந்தியாவில் 500 மில்லியன் பயனாளர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குகின்றனர். இந்த எண்ணிக்கை 800 மில்லியன் வரை வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.