தியாகத் திருநாளின் சாரம்சம் என்ன தெரியுமா...!
பக்ரீத் உலக இஸ்லாமியர்களால் அரேபிய மாதமான துல்ஹஜ் பிறை பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. 'திருநாள்கள்' என்றாலே ஆட்டம், கோலாகலம், கொண்டாட்டம் என்பதல்ல, மாறாக அனைவரும் உண்டு, உடுத்தி ஒரு சேர மகிழ்வாகக் கழிப்பது, சொந்தபந்தங்களுடன் உறவாடுதல், ஏழை எளியோருக்குக் கொடுத்து உதவி அதன்மூலம் உவகை அடைவது.
இறைவனுக்காக செய்யும் வணக்கத்தில் நாம் ஏனோ கடமைக்குச் செய்கின்றோம் என்றில்லாமல், அனைத்திலும் பரிபூரண நிலையைக் கையாளச் செய்கிறது இஸ்லாம். நாம் பிறருக்கு தானம் செய்யும் போதும்கூட நமக்கு பிடித்தமான பொருளிலிருந்து தானம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இறைவன் கூறுகிறான்: “நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடையமாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்". (திருக்குர் ஆன் 3:92) பின்னர் நாம் அறுத்த பிராணியின் இறைச்சியை மூன்றாகப் பிரித்து மூன்றில் ஒரு பாகத்தை ஏழை எளிய மக்களுக்கும், மறுபாகத்தை உறவினர்களுக்கும் கொடுத்துவிட வேண்டும். பிராணியின் தோலை விற்று வரும் பணத்தை வறியவர்களுக்குத் தானம் செய்துவிட வேண்டும்.
இதுதான் ஹஜ்ஜுப் பெருநாளின் சாரம்சம். ஆனால், இது ஆண்டுகொருமுறை தவறாமல் செய்யும் சடங்கல்ல. இது தியாக உணர்வை நமக்கு நினைவுபடுத்திச் செல்லும் திருநாள்.
இறைவனுக்காக செய்கின்ற தியாகமே உன்னதமானது அவனுக்காக நாம் அர்ப்பணம் செய்வதுதான் மாபெரும் தியாகம். அது எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதல்ல. அத்தகைய பண்பு இடைவிடாத பயிற்சியின் மூலமாக, இறைக்கட்டளைகளுக்குக் கீழ்படிவதன் வாயிலாக, இறைவனைச் சார்ந்திருந்து வாழ்வதன் மூலமாக கிடைக்கப்பெறும் அரிய பண்புகளாகும்.