செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (00:16 IST)

மருத்துவத்தில் பயன்படும் வல்லாரை !!

வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும்.வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும்.
 
வல்லாரை முழுத்தாவரமும் துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது. வல்லாரை ஞாபக சக்தியைப் பெருக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வியர்வையை அதிகமாக்கும்.
 
வல்லாரை சிறுசெடி ஆகும். சிறுநீரக வடிவமான இலைகள், அவற்றின் நுனியில் காணப்படும் வெட்டுப்பற்கள் போன்ற அமைப்பு, கை வடிவாக விரிந்துள்ள இலை  நரம்புகள், நீண்ட இலைக்காம்பு மற்றும் கணுவில் வேர்களைக் கொண்டு தரையில் படரும் வளரியல்பைக் கொண்டு வல்லாரையை இனம் காணலாம்.
 
வல்லாரை வேர்த் தண்டுகள் பல்லாண்டுகள் வரை உயிர்வாழ்பவை. வல்லாரை பூக்கள், மிகச் சிறியவை, இளஞ்சிவப்பு நிறமானவை. ஒரு கொத்தில் தொகுப்பாக 3  முதல் 6 பூக்கள் வரை காணப்படும்.வல்லாரை பழங்கள், சிறியவை, 7-9 விளிம்புக் கோடுகளுடன் காணப்படும்.
 
ஈரமான பகுதிகளான ஆற்றங்கரைகள், ஓடைகள், ஏரி, குளக்கரைகள், வயல் வரப்புகள் மற்றும் களிமண் பாங்கான நிலங்களில் வல்லாரை பசுமையாக அடர்ந்து  வளர்ந்திருக்கும். வல்லாரைக் கீரை நாம் அனைவரும் நன்கு அறிந்து உபயோகிப்படுத்த வேண்டிய மூலிகையாகும்.
 
மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்பி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி போன்ற தமிழ்ப்பெயர்களாலும் வல்லாரை பொதுவாக  அழைக்கப்படுகின்றது.