திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By

படர்தாமரை மற்றும் தேமலை போக்கும் தகரை, ஊசித் தகரை...!!

தகரை என்று ஒரு செடி இருக்கிறது. இது மிகச் சாதாரணமாக காலி இடங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் வளர்ந்து கிடக்கும். மழைக் காலங்களிலும் அதையடுத்து வரும் காலங்களிலும் செழித்து வளரும் இந்தச் தகரை இனச் செடிகள் பற்றிப் பார்ப்போம்.
தகரை இனச் செடிகளில் தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை, யானைத் தகரை போன்ற தகரைகள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே வகையான மருத்துவக் குணங்களைக் கொண்டிருந்தாலும் நாட்டு வைத்தியர்கள் தகரை மற்றும் ஊசித்தகரை செடிகளை மட்டுமே  மருத்துவத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். 
 
தகரையின் பெயர் சிங்கள மொழியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இந்தச் செடி நிறைய இடங்களில் காணப்படுகிறது. இதன் பூர்வீகம் எதுவென்று தெரியாவிட்டாலும், தெற்கு ஆசியப் பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தகரைச் செடியைப் பார்ப்பதற்கு  வேர்க்கடலை (நிலக்கடலை) செடி போல காட்சியளிக்கும். நீள் வடிவ முட்டை போன்று காணப்படும் இந்தச் செடி தமிழகத்தின் எல்லா  இடங்களிலும் காணப்படுகிறது.

ஊசித்தகரைச் செடி நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள்  கொண்டது. மயக்கத்தை ஏற்படுவதுபோன்ற மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் சீனி  அவரைக்காயைப் போன்று பயிறு போல நீண்டிருக்கும். பார்ப்பதற்கு நிலக்கடலைச் செடி போல காட்சியளிக்கும். இது, தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. 
 
அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்கூட தங்களை அழகுபடுத்திக் கொள்ளும்  காலம் இது. கருமையான நிறமாக இருந்தாலும், சிவந்த நிறமாக இருந்தாலும் பார்த்தவுடன் அழகை வெளிப்படுத்துவது அவர்களது தோல்  தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் நல்லது. ஆகவே, தோலில் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்ய தகரை  பயன்படும்.
 
பெண்கள் பாவாடை அல்லது இறுக்கமான உடைகளை உடுத்துவதால் இடுப்புப் பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும்.  அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியே சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை செய்யாமல் பிரச்சினையை அதிகரிக்கச் செய்துவிடுவார்கள். படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. இதற்கு தகரை அல்லது ஊசித்தகரை இலையை பறித்து சிறிது  எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்து பாதிப்பு உள்ள இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் சில நாள்களில்  பிரச்சினை தீரும். இதைத் தேய்க்கும்போது சிறிது எரிச்சல் ஏற்பட்டாலும், படர்தாமரை விலகி குணம் கிடைக்கும்.
 
மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக  தோன்றி பிறகு சிரங்குபோல் மாறிவிடும். இதற்கு தகரையின் இலையை  நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி  மற்றும் சிரங்கை கழுவிவிட்டு தகரை இலையுடன் மஞ்சள் அரைத்துப் பற்று போட்டால் அது சரியாகிவிடும்.  
 
கட்டிகள், வாய்வுப் பிடிப்பு, நரம்புப் பிடிப்பு மற்றும் வீக்கம் காணப்பட்டால் தகரை இலையை நீர்விட்டு மையாக அரைத்து களிபோல் கிளறி, இளம்சூட்டில் பற்று போட்டால் பிரச்சினைகள் சரியாகும். இதேபோல் தேமல், படை போன்ற தோல் நோய்களுக்கு ஊசித்தகரையின் வேரை  எலுமிச்சைப் பழச்சாற்றில் இழைத்து தடவினால் பிரச்சினை தீரும். விதையை புளித்த மோரில் அரைத்து தடவினால் படை, சிரங்கு மற்றும்  ஆறாத புண்கள் குணமாகும். 
 
ஊசித்தகரை இலையை இலைக்கள்ளிச் சாற்றில் ஊறவைத்து உலை கொதிக்க வைத்த நீரில் அரைத்துப் பற்று போட்டால் தொழுநோய் புண்,  புரையோடிய புண்கள், படர் தாமரை, கட்டிகள் குணமாகும். இதேபோல் படர்தாமரை, சொறி ஆகிய பிரச்சினைகள் விலகும்.