சூப்பர்ஹீரோ ரசிகர்களின் 4 வருட போராட்டம்! – ரிலீஸாகிறது ஸ்னைடர் கட் “ஜஸ்டிஸ் லீக்”
உலகம் முழுவதும் உள்ள டிசி ரசிகர்களின் பல வருட கோரிக்கையின் விளைவாக ஸ்னைடர் கட் “ஜஸ்டிஸ் லீக்” படத்தை வெளியிட வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்டவை மார்வெல் மற்றும் டிசி திரைப்பட வரிசை. இதில் மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 25க்கும் அதிகமான படங்கள் வெளியாகி வசூலை வாரி குவித்துள்ளது. டிசி தற்போது வரை சில படங்களையே வெளியிட்டிருந்தாலும் அதற்கும் ரசிகர்களிடையே வரவேற்பு உள்ளது.
2017ல் டிசி சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியில் வெளியான படம் ஜஸ்டிஸ் லீக். ஆரம்பத்தில் “மேன் ஆப் ஸ்டீல்”, “வாட்ச்மேன்” உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை இயக்கிய ஸாக் ஸ்னைடர் இந்த படத்தை இயக்கி வந்தார். படபிடிப்பு காலத்தின் இடையே ஸாக் ஸ்னைடரின் மகள் இறந்துவிட்டதால் அவர் படப்பிடிப்பிலிருந்து வெளியேறும் சூழல் உருவானது. இதனால் மீத படப்பிடிப்புகளை நடத்தும் பணியை மார்வெலின் “அவெஞ்சர்ஸ்” படத்தை இயக்கிய ஜாஸ் வேடன் ஏற்றுக்கொண்டார். இரு இயக்குனர்கள் இயக்கிய படம் என்பதால் ஜஸ்டிஸ் லீக் இருவரது தாக்கமும் இன்றி சுமாரான படமாக அமைந்தது. இதனால் வசூலிலும் சுமாரான பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக அது அமைந்தது.
இந்நிலையில் ஸாக் ஸ்னைடர் முழுவதுமாக “ஜஸ்டிஸ் லீக்” படத்தை முடித்திருந்ததாகவும் அதை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்றும் செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து ஸாக் ஸ்னைடரின் “ஜஸ்டிஸ் லீக்” படத்தை வெளியிட வேண்டும் என கடந்த 4 வருடங்களாக பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் தொடர்பான ஹேஷ்டேகுகள் இணையத்தில் அடிக்கடி ட்ரெண்டான நிலையில் தற்போது HBO Max ஆன்லைன் தளத்தில் ஸ்னைடர் கட் வெளியாக இருப்பதாக வார்னர் ப்ரதர்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஸாக் ஸ்னைடர் கட் 4 மணி நேரம் நீளம் கொண்டது என்றும் அதை 6 பாகமாக பிரித்து வெளியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் எதிர்வரும் 2021ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களிலேயே ஒரு சூப்பர்ஹீரோ திரைப்படம் இரண்டு இயக்குனர்களின் பார்வையில் இரண்டு வெர்ஷன்களாக வெளியாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.