புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 மே 2024 (15:40 IST)

இருளின் அரசன் சவுரானின் எழுச்சி.. மீண்டெழும் காண்டார் ராஜ்ஜியம்! – சிலிர்க்க வைக்கும் The Rings of Power சீசன் 2 ட்ரெய்லர்!

The Rings of Power
நாவலாகவும், திரைப்படமாகவும் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ பட வரிசையின் முன்கதையான ‘தி ரிங்ஸ் ஆப் பவர்’ வெப்சிரிஸின் இரண்டாவது சீசனுக்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.



ஹாலிவுட்டில் பிரபலமாக உள்ள ஹாரிபாட்டர், நார்னியா, ட்விலைட் சாகா பட வரிசைகளில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆப் தி ரிங்ஸ் படவரிசை. ஆங்கில எழுத்தாளர் ஜே.ஆர்.ஆர் டோல்கியன் எழுதிய தி லார்ட் ஆப் தி ரிங்ஸ், தி ஹோபிட் புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இருள் அரசன் சவுரான் பயன்படுத்திய சக்திவாய்ந்த மோதிரத்தை அழித்து அவன் மீண்டெழுந்து உலகை ஆள நினைக்கும் எண்ணத்தையும் அழிப்பதை கதையாக கொண்டது ‘தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ கதை. அதன் முன்கதையாக தற்போது உருவாகி வருவதுதான் ‘தி ரிங்ஸ் ஆப் பவர்’ வெப்சிரிஸ். இதன் முதல் சீசன் 2022ல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது சீசனுக்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


முதல் சீசனில் கெலாட்ரியல், எல்வ்ஸ் உள்ளிட்ட முக்கியமானவர்களின் அறிமுகம். மிடில் எர்த்தில் சவுரானின் எழுச்சிக்கான முயற்சிகள் ஆகியவை காட்டப்பட்டிருந்தன. தற்போது இரண்டாவது சீசனில் மிடில் எர்த் வலுவிழந்து இருப்பதும், சவுரான் தனது தந்திரங்களால் காண்டார் ராஜ்ஜியத்தை உருவாக்குவதும், மிடில் எர்த்தை தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சவுரானை கெலாட்ரியல் வீழ்த்துவது அடுத்த சீசனில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசன் முழுவதும் சவுரானின் இருள் ராஜ்ஜியத்தின் பரவலும், மிடில் எர்த்தின் பதற்றமான சூழலும் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது லார்ட் ஆப் தி ரிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Edit by Prasanth.K