மீண்டும் மார்வெலுக்கு திரும்பினார் ஸ்பைடர்மேன்! – ரசிகர்கள் மகிழ்ச்சி

spiderman
Prasanth Karthick| Last Modified சனி, 28 செப்டம்பர் 2019 (13:05 IST)
சோனி மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மார்வெல் படங்களில் ஸ்பைடர்மேன் வரமாட்டார் என்று அறிவித்திருந்த நிலையில், மீண்டுமொரு புதிய ஒப்பந்தம் மூலம் ஸ்பைடர்மேன் திரும்ப வந்துள்ளார்.

உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சூப்பர் ஹீரோக்களில் முக்கியமானவர் ஸ்பைடர்மேன். சமீபத்தில் மார்வெல் “அவெஞ்சர்ஸ்” திரைப்படத்தின் மூலம் சூப்பர்ஹீரோ கூட்டணியில் இணைந்தார் ஸ்பைடர்மேன். ஏற்கனவே ஸ்பைடர்மேனுக்கு பல தனி திரைப்படங்கள் வந்திருந்தாலும், இனி ஸ்பைடர்மேன் சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து சாகசம் செய்ய போகிறார் என்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன்: ஃபேர் ஃப்ரம் ஹோம் 1 பில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஸ்பைடர்மேன் உரிமையை வைத்துள்ள சோனி நிறுவனத்துக்கும், அவெஞ்சர்ஸ் படங்களை தயாரித்து வரும் டிஸ்னியின் மார்வெல் ஸ்டுடியோஸுக்கும் இடையே ஒப்பந்தத்தில் பிரச்சினைகள் எழுந்தன. இதனால் இனி மார்வெல் ஸ்டுடியோஸில் ஸ்பைடர்மேன் படங்கள் வராது, அவர் அவெஞ்சர்ஸ் டீமிலும் வரமாட்டார் என அறிவித்தார்கள். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலர் ஸ்பைடர்மேன் மீண்டும் வர வேண்டும் என சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க தொடங்கினர்.

ரசிகர்களின் போராட்டம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டானது. இந்நிலையில் மீண்டும் சந்தித்து பேசியுள்ள சோனி மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளன. இதனால் ஸ்பைடர்மேன் படங்கள் மீண்டும் மார்வெலில் வர உள்ளது. ஏற்கனவே ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் இரண்டு மார்வெல் ஸ்டுடியோஸில் வெளிவந்துள்ள நிலையில் அதன் மூன்றாம் பாகம் 2021ம் ஆண்டு மே 21ல் வெளியாகும் என மார்வெல் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஸ்பைடர்மேன் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :