1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. ஹோலி ஸ்பெஷல்
Written By Sasikala

ஹோலி பண்டிகையின் பின்னணியில் உள்ள இரு புராண கதைகள்..!!

புராண காலத்தில் பிரகலாதனை அவரது தந்தையான இரண்யகசிபு தனது பெயரை அழைக்காமல், ஹரியின் நாமத்தை மகன் அழைத்து கொண்டிருக்கிறானே என்று  இரண்யகசிபு கோபம் கொண்டான். விஷம் கொண்ட பாம்புகள் பிரகலாதனை தீண்டியும், மதம் கொண்ட யானைகளால் பிரகலாதனை மிதிக்க வைத்தும்  பிரகலாதனுக்கு சித்ரவதைகள் நடந்தன.
ஒவ்வொரு நாளும் தன்னை போற்றி பாடும்படி பிரகலாதனை வற்புறுத்தியும், நாராயணனே முதல் கடவுள்; அவரது நாமத்தையே உச்சரிப்பேன் என்று பிரகலாதன்  மறுத்து வந்தான். இதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயில் தனது மகனை மடியில் அமரவைத்து கொல்லுமாறு இரண்யகசிபு உத்தரவிட்டான். 
 
சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை தன் மடியில் வைத்துக்கொண்டு, மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகள்  கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. எனினும், நாராயணனின் மந்திரத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. இதனால் கொழுந்துவிட்டு எரிந்த தீயில்  ஹோலிகா பஸ்பமானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் தீயிலிருந்து வெளியேறினான். இதுவே ஹோலி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்று புராணங்கள்  கூறுகின்றன.
 
மற்றொரு புராணக் கதை: 
 
ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணந்து கொள்ள தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என்று தட்சன் ஆணவத்துடன்  கூறினான். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. 
 
தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு  சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர்  பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார்.
 
இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி  வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி  கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.