வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (12:44 IST)

பங்குனி உத்திர நாளின் அற்புத சிறப்புகளும் பலன்களும் !!

நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறும்.
 
நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற உள்ளது.
 
அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள்  இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.
 
உவமையற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு பல்குணன் என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர். ஊன் உறக்கமின்றி கண்  இமையால் நம்மைகாக்கும் இமையவர்கள் என ஸ்ரீதாயாரும், பாற்கடல் பள்ளி கொண்டோனும் போற்றும் நாள் பங்குனி உத்திரம். உத்திரம், தாயாரின் திருநட்சத்திரம்.
 
பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்ளன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.
 
பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான்.
 
கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும். திருவையாறு அருகிலுள்ள  திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.