புதன், 17 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 மே 2025 (18:25 IST)

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்.. சிவகங்கை சோமநாதர் திருக்கோவில் பெருமைகள்..!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்.. சிவகங்கை சோமநாதர் திருக்கோவில் பெருமைகள்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள சோமநாதர் திருக்கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமைமிக்க சிவஸ்தலமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளும் கொண்ட இந்த ஆலயத்தில் சந்திர பகவான் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். இங்கு சோமேஸ்வரர் மூலவராகவும், ஆனந்தவல்லி அம்மன் அம்பாளாகவும் காட்சி தருகின்றனர்.
 
புராணக்கதைப்படி, ரோகிணி மற்றும் கார்த்திகை மீது அதிகமான அன்பு காட்டிய சந்திரனுக்கு, மற்ற மனைவிகள் தட்சனிடம் முறையிட்டு சாபம் பெற்றார். பின்னர் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இவ்விடத்தில் சிவனை வழிபட்டு தனது நோயிலிருந்து மீண்டார். சந்திரன் செய்த அபிஷேகத்தால், இங்குள்ள லிங்கம் வெண்மை நிறத்தில் உள்ளது என்பது இந்தத் தலத்தின் சிறப்பு.
 
மேலும், மதுரையை கைப்பற்ற விரைந்த வேற்று மத சக்திகளிடம் இருந்து மீனாட்சியும் சொக்கநாதரும் பாதுகாக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் இவ்வாலயத்தில் வைக்கப்பட்டனர் என்பதும் முக்கிய வரலாறு. தளவாய் வெள்ளையன், தாண்டவராயப் பிள்ளை உள்ளிட்ட வீரர்கள் ஆலவாய் தெய்வங்களை இங்குக் கொண்டு வந்து பாதுகாத்தனர்.
 
சிறப்பாக வடிக்கப்பட்ட ஐந்து நிலை ராஜகோபுரம், சந்திரன், ரோகிணி, கார்த்திகை ஆகியோரின் ஒரே கல்லிலான சிற்பம், மற்றும் சந்திர புஷ்கரணி தீர்த்தம் இக்கோவிலின் தனிச்சிறப்புகள். சித்திரை, ஆடி, மார்கழி விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். திருமண தடை, சரும நோய் நீங்கும் திருத்தலமாக இந்த சோமநாதர் கோவில் கருதப்படுகிறது.
 
Edited by Mahendran