நாளை கிருஷ்ண ஜயந்தி.. தொட்டு வரும் வழக்கங்கள் என்னென்ன?
ஆவணி மாதத்தில் பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. மகாவிஷ்ணுவின் அவதாரமான கண்ணன் பிறந்த இந்த நாளை, விரதம் இருந்து பூஜை செய்து, பலவிதமான நிவேதனங்களைப் படைத்து பக்தர்கள் கொண்டாடுகின்றனர். குறிப்பாக, குழந்தைக் கண்ணன் வீட்டிற்குள் நடந்து வருவதை போல அவரது பாதங்களை மாவால் வரைந்து வழிபடுவது தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது.
கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய், பால், தயிர் மட்டுமல்லாமல் அவல், அப்பம், சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களும் இந்த நாளில் படைக்கப்படுகின்றன. கண்ணனின் நெருங்கிய நண்பரான குசேலர் அன்போடு கொண்டு வந்த அவலை அவர் ஏற்றுக்கொண்ட நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக அவலுக்கு தனி சிறப்பு உண்டு. அதேபோல், ஏழை மூதாட்டியிடம் நாவற்பழம் பெற்ற கண்ணனின் அருளை நினைவுகூர்ந்து நாவற்பழமும் நிவேதனமாக வைக்கப்படுகிறது.
கண்ணனுக்கு மிகவும் பிரியமான துளசியால் அர்ச்சனை செய்வதும், மணம் வீசும் மலர்களால் அலங்கரிப்பதும் இந்த நாளின் மற்றொரு சிறப்பு. கோகுலத்தில் கண்ணன் செய்த வெண்ணெய் திருட்டு லீலைகளை நினைவுபடுத்தும் வகையில் பல இடங்களில் உறியடி விழாவும் உற்சாகமாக நடத்தப்படுகிறது.
கிருஷ்ண ஜயந்தி என்றாலே ஆடம்பரமான கொண்டாட்டம் மட்டுமல்ல; மனம் நிறைந்த பக்திதான் முக்கியம். கண்ணனின் திருநாமத்தைச் சொல்வது, அவரது அவதார வரலாற்றை கேட்பது, பாடல்கள் பாடுவது என எளிமையாகவே வழிபடலாம். அன்போடு அழைக்கும் இடத்திற்கெல்லாம் குழந்தைக் கண்ணன் வந்து அருள்புரிவார் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.
Edited by Siva
