வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2024 (18:02 IST)

மழை காரணமாக திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா தேரோட்டம் ரத்து: மகா தீபம் மட்டும் ஏற்ற ஏற்பாடு..!

கனமழை காரணமாக திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவின் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆனால் அதே நேரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று தேரோட்டம் நடைபெற இருந்தது.

ஆனால் மழை காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சிறிய பல்லக்கில் ரத வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு கோவிலில் பால தீபம் ஏற்றப்பட்டு, பின்னர் மலைமேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தாமிர கொப்பரையில் 150 லிட்டர் நெய் மற்றும் 100 மீட்டர் நீள காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை அடுத்து, பக்தர்கள் தீபத்தை கண்டு "முருகா முருகா" என கோஷமிட்டனர்.

மேலும், மலைக்கு செல்ல இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டது. உரிய அனுமதி சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.



Edited by Mahendran