திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (11:35 IST)

பரமேஸ்வரரின் பரிபூரண ஆசி தரும் மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

Lord shiva
அழிக்கும் வேகமும், காக்கும் விவேகமும் கொண்ட கயிலைமலை நாதன் பரமேஸ்வர பெருமானின் அருளை பெற மகாசிவராத்திரியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பதை அறிவோம்.



கையிலாய மலையில் வீற்றிருக்கும் பரமேஸ்வரர் அசுரர்களை வென்று தேவர்களை காப்பவர். இன்னலென்று வருபவர்க்கு மின்னலென குறை தீர்த்து நலம் பயப்பவர். அப்படியான மகாதேவருக்கு உரிய பொன்னான நாட்களில் ஒன்று மகாசிவராத்திரி.

பார்வதி தேவிக்கு நவராத்திரி, பரமேஸ்வர கடவுளுக்கு ஒரு ராத்திரி மகாசிவராத்திரி என்பர். மகாசிவராத்திரி நாளில் மேற்கொள்ளும் விரதமானது சிவபெருமானுக்கு மற்ற நாட்களில் மேற்கொள்ளும் அனைத்து விரதங்களையும் சேர்த்தாலும் மேன்மை தங்கி நிற்பது.

சிவராத்திரி நாளில் காலையே வீடை முழுவதும் சுத்தம் செய்து, கழுவி, வாசலை பசும் சாணத்தால் மெழுகி கோலமிட வேண்டும். காலையே புனித நீராடி, சிவபெருமானின் அம்சமான திருநீறை நெற்றியில் இட்டு, பூஜையறையில் விளக்கேற்றி பரமேஸ்வரரை வணங்க வேண்டும்.


விரத நாளில் அசைவம் சமைத்தல் ஆகாது. சைவ உணவாக இருந்தாலும் வெளியே கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுத்தமாக சமைத்து சாப்பிடுதல் வேண்டும். மகாசிவராத்திரி மாலை பொழுதுக்கு முன்பாகவே அன்றைய தின உணவு வேளைகளை முடித்து விட வேண்டும்.

சிவபெருமானுக்கு வில்வ மரம் உகந்தது, சிவபெருமான் கோவில்களில் தல விருட்சமாக வில்வ மரமே அமைந்திருக்கும். முடிந்தால் வில்வ இலையில் மாலை செய்து சிவபெருமானுக்கு அணிவிப்பது சிறந்தது.

Sivalingam


மகாசிவராத்திரி அன்று மாலை 6 மணிக்கு கணேச மாலை பாடி விரதத்தை தொடங்க வேண்டும். அனைத்திற்கும் ஆரம்பம் விநாயக பெருமான். தெரிந்த விநாயக மந்திரங்களை துதித்து மகாசிவராத்திரியை தொடங்கிய பின்னர் ஆகாரம் கொள்ளல் கூடாது. வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் அதிகம் பசி எடுத்தால் பால், துளசி தீர்த்தம் மற்றும் பழ வகைகளை அருந்தலாம்.

சிவபெருமானை நினைத்து துதிக்கும் மந்திரங்களில் பஞ்சாட்சர சிவ மந்திரம், ருத்ர மந்திரம், சிவ தியான மந்திரம் சிறப்புடையவை. அவற்றை துதித்து பரமேஸ்வரரை மனமுருக வேண்டுவது சிவபெருமானின் பரிபூரண அருளை வழங்கும். மகாசிவராத்திரி முடிந்து மறுநாள் காலை தலை குளித்து அருகே உள்ள சிவ ஸ்தலங்களுக்கு சென்று வர பல ஆயுளுக்கு விரதம் மேற்கொண்ட பலனை அடையலாம்.

Edit by Prasanth.K