வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (16:40 IST)

திதி, திவசம் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிற விஷயம் தெரியுமா....?

திதி, திவசம் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிற விஷயம் தெரியுமா....?
திவசம் வேறு, தர்ப்பணம் வேறு. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு நாளும் எல்லோரும் செய்ய வேண்டிய புண்ணிய காரியம். சூரியன், வருணன், அக்கினி என எல்லா தேவர்களுக்கும் நீர் நிலைகளில் நின்று ஜலத்தை அள்ளி விட்டு ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும்  செய்வதே தர்ப்பணம்.
 
தர்ப்பணம் என்றால் 'திருப்தி செய்வது' என்று பொருள். நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது. ஆனால், அமாவாசை மற்றும்  இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இந்த இரு நாட்களில் மட்டுமே  இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் இதை ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.
 
திவசம் என்றால் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி)  பிராமணரை அழைத்து செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு.
 
ஹோமம் வளர்த்து முதலில் தேவர்களை திருப்தி செய்ய வேண்டும். பின்னர் 3 தர்ப்பை புல்லில், இறந்து போனவர் மற்றும் அவர்களது முன்னோர்கள் என அனைவரையும் மானசீகமாக வரவழைத்து அவர்களின் மேல் பிண்டம் வைத்து உணவளிக்க வேண்டும். அந்த பிண்டத்தை  பசுக்களுக்கு அளித்து பிராமணருக்கு அரிசி, காய்கறிகள், தட்சிணை அளித்து ஆசி பெற வேண்டும்.
 
பின்னர் படையல் இட்டு, காக்கைக்கு  உணவிட்டு, அதன் பிறகே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். இதுவே திவசம் எனப்படுகிறது. இது வசதியுள்ளவர்கள் பண்ணக்கூடியது. வசதியில்லாதவர்கள் அந்தத் திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
 
ஆனால் திவசமோ, தர்ப்பணமோ திதியைப் பார்த்து மட்டுமே தர வேண்டும். இருக்கும் போது நட்சத்திரம் என்பார்கள். அதாவது உங்களின்  பிறந்த நாளை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டே கொண்டாடவேண்டும்.
 
அதைப்போலவே இறந்தவர்களுக்கு அவர்கள் இறந்து போன திதிதான் முக்கியம். அன்றைய தினத்தில் மட்டுமே அவர்கள் நம்மை நாடி  வருகிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை மற்றும் இறந்து போன திதியில் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். எனவே அதை  விடுத்து அவர்கள் இறந்து போன தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானது எனக்கூறப்படுகிறது.