புதன், 4 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (14:57 IST)

ஐப்பசி கார்த்திகை; செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!

Selvamuthukumarasamy
ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு  வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் நவகிரகங்களில் செவ்வாய்,  சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சித்தர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.

செல்வ முத்துக்குமாரசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலின் பிரசாதமான திருச்சாந்துருண்டையை  உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் செல்வம் முத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

ஐப்பசி மாத கார்த்திகையான இன்று  செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதியில் இருந்து புறப்பட்டு சண்முகர் சன்னதி அருகே உள்ள உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் முருக பெருமானுக்கு  சந்தனம்,பால்,இளநீர் மற்றும் 16 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னர் மலர்களால் அலங்காரம் சேவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.