செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

நம் வாழ்வில் அனைத்து வளங்களையும் தரக்கூடிய அஷ்டலட்சுமி!!!

நம் வாழ்வில் அனைத்து வளங்களையும் தரக்கூடிய அஷ்டலட்சுமி!!!

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.

 
1. ஆதிலட்சுமி
 
பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கீரிடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன.
 
2. சந்தானலட்சுமி
 
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர குழந்தைச் செல்வம் இன்றியமையாதது. அத்தகைய குழந்தை செல்வத்தை வழங்குபவள். இவ்வம்மை ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கிறாள்.
 
3. கஜலட்சுமி
 
இவ்வம்மையே இராஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான்.
 
4. தனலட்சுமி
 
தனம் என்பது பணம் அல்லது பொன்னினைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம்; நம்மில் பலரால் விரும்பப்படுவது. இத்தேவி வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள்.
 
5. தான்யலட்சுமி
 
இவ்வம்மையே எங்கும் செழுமை நிறைந்திருக்கக் காரணம் ஆவாள். இவளின் அருளாலே உலகில் பசிப்பிணி நீங்குகிறது. இவள் தானியங்கள், உணவுகள், ஊட்டச்சத்துகள், வேளாண்மை ஆகியவற்றிற்கு அதிபதி. இவ்வம்மையே அன்ன லட்சுமி என்றும் போற்றப்படுகிறாள்.
 
6. விஜயலட்சுமி
 
இவ்வம்மை ஜெயலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். நம் வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருப்பவள். இவ்வம்மையின் அருட்பார்வையாலே நம்மால் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும். வெற்றி, தைரியம், நம்பிக்கை, பயமின்மை ஆகியவற்றிற்கு இவளே அதிபதி.
 
7. வீரலட்சுமி
 
இவ்வன்னை தைரிய லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவளுக்கு உண்டு.
 
8. வித்யாலட்சுமி
 
இவ்வன்னையே வித்யா எனப்படும் ஞானமாகிய கல்விக்கு அதிபதி. இத்தேவி கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் ஆவாள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருளுவாள்.