வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சரும வறட்சியை போக்கி மென்மையாக்கும் பயத்த மாவு !!

தலையில் மட்டுமல்லாமல் சிலருக்கு உடல் முழுக்கவேகூட சருமம் வறண்டு வருத்தம் வாட்டியெடுக்கும் அவர்களின் வருத்தத்தை விரட்டவே இந்த குறிப்புகள். 

 
பயத்தம் பருப்பைத் தனியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து டீஸ்பூன் நல்லெண்ணெய்யைச் சிறிது சூடாக்கி, அதில் தேவையான அளவு பவுடரைக் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். குளிக்கும் போது தலை முதல் கால் வரை பூசி, சூடான நீரினால் அலம்புங்கள். இந்தப் பயத்தம் குளியலை வாரம் இருமுறை மேற்கொண்டாலே, மேனி புத்துணர்ச்சியுடன் பளபளக்கும்.
 
பலருக்கும் முகம் பளிச்சென்று இருக்கும். ஆனால் கை, கால்களில் மட்டும் சுருக்கம் தோன்றி, முதிய தோற்றம் காட்டும். ஒரு டீஸ்பூன் பயத்தம் மாவுடன் 5 துளி எலுமிச்சை சாறு கலந்துகொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் சேர்த்து பேஸ்டாக்கி, சுருக்கம் விழுந்த பகுதிகளில் இந்த பேஸ்ட்டைச் சில நிமிடங்கள் தடவிக்கொண்டே இருந்துவிட்டு, சூடான நீரில் கழுவி விடுங்கள். ஊற விடக்கூடாது. 
 
விரைவிலேயே சுருக்கங்கள் மறைந்து. தோல் மிருதுவாகும். முக அழகைக் கெடுக்கும் பருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு போன்றவற்றைப் போக்கி, முகத்தைக் கண்ணாடி போல மினுமினுக்க செய்கிற ஸ்பெஷல் பவுடர் இது.
 
பயத்தம் மாவு 1 டீஸ்பூன், வெட்டிவேர் பவுடர் அரை டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன். இவற்றைக் கலந்து கொண்டு முகத்தில் உள்ள பருக்கள், தேமல், தழும்பு பகுதிகளின் மீது இந்தப் பேஸ்ட்டை லேசாக அழுத்திப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து அலச தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!
 
பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிற பாதங்களால் படுகிற இம்சை சொல்லி மாளாது. வெடிப்புகளால் மனம் வெடிப்பவர்களுக்கான மகிழ்ச்சி பேஸ்ட் இது. தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், பசுநெய் 4 துளி, மஞ்சள்தூள் 2 சிட்டிகை. இவற்றுடன் 1 டீஸ்பூன் பயத்தம் மாவைச் கலந்து கொள்ளுங்கள்.

தினமும் தூங்கப்போகும் போது வெடிப்பு இருக்கும் பகுதியில் ஐந்து நிமிடங்கள் தடவியபடி இருந்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். விரைவிலேயே வெடிப்பு, கருமை நீங்கி பாதம் மெத்தென்று ஆகிவிடும்.