செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (12:04 IST)

ஆமணக்கெண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்!

கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிக்க...

ஆமணக்கெண்ணெய் இனிப்பானது. இது விபாகத்திலும் இனிப்பு. இது சீக்கிரமாக வேலை செய்கிறது. இது உஷ்ணமானதும் கனமானதும் ஆகும். இது, கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக இருக்கிறது.




உபயோகங்கள் : குழந்தைகளுக்குப் பேதிக்குக் கொடுக்கின்ற மருந்துகளில் மிக உத்தமமானது இது. இதை நாள் தோறும் ஒரு தேக்கரண்டி அளவு தாய்ப் பாலிலேனும், பசும் பாலிலேனும் கலந்து கொடுக்கலாம். வயிற்றினுள் ஏற்படும் வீக்கமான நிலையில் இதை மிகவும் பாதுகாப்பான மலப் போக்கியாகக் கொடுக்கலாம்.

ஆயுர்வேத மருத்துவர்கள், சிற்றாமணக்கு எண்ணெயை ஆமவாத நோயில், நோய்க்குரிய மருந்தாகக் கருதப்படுவது ஏன் எனின், அது உடலிலுள்ள விஷத்தன்மையை வெளிப்படுத்த உதவி செய்கின்றது.
வெளிப் பிரயோகத்தில், தோலின் வெடிப்புகட்கும், பிளவுகட்கும், பாதங்களின் எரிச்சலுக்கும் பயன்படுகிறது. சுண்ணாம்பையும் விளக்கெண்ணெயையும் கலந்து பசையாக சிரங்குகட்கு வெளிப்பிரயோகமாகப் போடலாம். கட்டிகளுக்குப் போட அவை பழுத்து உடையும்.

சிற்றாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டிவரப் பெண்களுக்குப் பால் சுரக்கும்.
இலைகளைச் சிறுக அரிந்து, சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கித் தாங்கக்கூடிய சூட்டில், வேதனையுடன் கூடிய கீல்வாதங்கட்கும், வாதரத்த வீக்கங்கட்கும் ஒற்றடமிடலாம்; இதனால் வேதனை தணியும்.

சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமபாகமெடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காய் அளவு மூன்று நாளைக்குக் காலையில் மாத்திரம் கொடுத்து, நான்காம் நாள் 3 அல்லது 4 முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைச் சூரணம் கொடுக்க, காமாலை தீரும்.
மலக்கட்டும், வயிற்று வலியும் உள்ளபோதும், சூதகக் கட்டு அல்லது சூதகத் தடையுடன் அடிவயிற்றில் வலிகாணும்போதும், அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு எண்ணெயை இலேசாகத் தடவி, அதன் மீது சிற்றாமணக்கு இலையை வதக்கிப் போட்டுவர, அவைகள் குணப்படும்.

வாதத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் கஷாயங்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம்.
எண்ணெயின் செய்கை : மலமிளக்கி (Laxative) ; வரட்சியகற்றி (Emollient)

சிறப்புக் குணம் : சிற்றாமணக்கு எண்ணெயினால் மருந்தின் வேகம், வாயுவினால் மூலத்தில் உண்டாகும் அழரை ஆகியவை நீங்கும்.

குழந்தைகளைத் தாய் போல வளர்க்கும். இதைப் பேதியாவதற்குக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் பேதிக்குத் கொடுக்க இது ஓர் சிறந்த மருந்தாகும். இது குடலைத் தூண்டி மலத்தைச் சுகமாகக் கழிக்கும். வயிற்று வலி, ஆசனக் கடுப்பு முதலிய துர்க்குணங்களைப் பிறப்பிக்காது; ஆகையால், கைக்குழந்தை முதல் கிழ வயதுடையவர் வரையிலும், கர்ப்பிணி, பிரசவித்த பெண், பித்ததேகி, மூலரோகி, சீத இரத்த பேதியால் வருந்துவோர், பிரமேக ரோகிகள் ஆகியவர்களுக்குப் பயமின்றிக் கொடுக்கலாம்.
வயிற்று வலியால் துன்புறுவோருக்கு இதைக் கொடுக்க, சாந்தமாய்ப் பேதியாகும்.

கபத்தினால் ஏற்படும் கோழைக்கட்டு, சுவாசம், சுவாச காசம் இவைகட்குச் சிற்றாமணக்கெண்ணெய் இரண்டு பங்கு, தேன் அரை பங்குசேர்த்து நன்றாய் உறவுபடக் கலந்து கொடுக்க இலேசாக மலம் போதலுடன் நோய் தணிந்து சுகமுண்டாகும்.
கண்கள், மருந்து வேகத்தாலும், தூசுகள் விழுந்து அருகி சிவந்தாலும், சிற்றாமணக்கெண்ணையும் முலைப்பாலும் கூட்டிக் குழைத்துக் கண்ணிலிட, சிவப்பு மாறும்; அருகலும் குணமாகும்.