ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (22:30 IST)

7000 வருடங்களுக்கு முன்பே பல் மருத்துவத்தை கண்டுபிடித்த முன்னோர்கள்! – ஆச்சர்யமளிக்கும் மருத்துவ வரலாறு!

வரலாற்றில் பல் மருத்துவம் :

 இன்று நாம் காண்கின்ற நவீன பல் மருத்துவத்தின் வளர்ச்சி என்பது  பல நூறு ஆண்டுகளுக்கான தொடர்ச்சி ஆகும்.

 பண்டைய பல் மருத்துவம்:

 சுமார் கி.மு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  பல் மருத்துவம்  நடைமுறையில்  இருந்ததற்கான  ஆதாரங்கள் உள்ளன.  பழைய  சிந்து சமவெளி  நாகரிகம் தொட்டு  இது  பின்பற்றப்பட்டு வந்துள்ளது.  தொல்லியல் ஆராய்ச்சிகளின்  மூலம்  பண்டைய பற்களை  ஆராய்ச்சி செய்ததில்  கூர்மையான  பொருட்களைக் கொண்டு  பற்களை  துளையிட்டத்திற்கான  சான்றுகள் கிடைத்துள்ளன.  சுமேரிய நாகரிகத்தில்  ‘பற்சிதைவு’ என்பது  ‘பல் புழுக்கள்’  என்று விவரிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக  சீனர்கள் ‘அக்குபஞ்சர்’ முறையில்  பல் சிகிச்சை செய்து வந்துள்ளனர்.  ஆரம்ப  பல்துலக்கிகளை  கண்டுபிடித்த பெருமையும்  சீனர்களையே சேரும்.

 பண்டைய  தமிழர்களுக்கான  பல் பராமரிப்பு:

 “பல்போனால்  சொல் பேச்சு” 
“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” 
என்ற  பழமொழிகளின் மூலம்  பல் பற்றிய  புரிதலும்,  அதனை சுத்தம் செய்ய  ஆலங்குச்சி, வேலங்குச்சி போன்ற மரக் குச்சிகளை  நம் முன்னோர்கள்  பயன்படுத்தி உள்ளனர் என்று  அறிய முடிகிறது.  நவீன மருத்துவத்தில்  பல் பராமரிப்பின்  முக்கிய அம்சமாக உள்ள,  ‘வாய் கொப்பளித்தல்’  என்னும் முறையை  நம் முன்னோர்கள்  தினசரி வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  அதிலும் எண்ணெய் கொண்டும், ஆலம்பால் கொண்டும்,  கொப்பளித்து வந்துள்ளனர்.  ஆனால் பிற்காலத்தில்  செங்கல் தூள், சாம்பல், கரி ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர்.  இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

 மாயன் நாகரிகத்தில்  பற்களின் பங்கு:

 மெசோ அமெரிக்காவின்  பாரம்பரிய நாகரிகங்களில்  மிகவும்  பிரபலமானவர்கள் மாயன்கள்.  இவர்கள்  தங்களின் பற்களை,  துளையிட்டு வைரம், வைடூரியம் போன்ற விலை உயர்ந்த கற்களை பதித்து வைத்ததற்கான  ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  இன்று நவீன மருத்துவத்தில் இது போன்ற அழகியல்  முறைகளின்பால்  மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

   தடவியல் பல் மருத்துவம்:

 மரணத்திற்குப் பிறகும்  நீண்ட  ஆண்டுகளுக்கு அழியாமல்  இருக்கக்கூடிய  ஓர் உறுப்பாக  பற்கள்  இருப்பதினால்,  இது தொல்லியல் மற்றும்  தடவியல் மருத்துவத்தில்  பெரும் பங்கு வகித்து வருகிறது . இதற்கு எடுத்துக்காட்டாக  35 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு  வாழ்ந்த ஒரு கற்கால மனிதனின் பல்லை கொண்டு  அவன் வாழ்ந்த காலகட்டத்தையும்,  வயதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.  பல குற்ற வழக்குகளில்,  பற்களின் தடயத்தை கொண்டு  குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுகிறது . பெரும் இயற்கை சீற்றங்கள்  அழிவுகளின் மூலம்  இறந்தவர்களை  அடையாளம் காண பற்கள் பயன்படுகிறது.

 ஜார்ஜ் வாஷிங்டன்:

 வரலாற்றில்  பல் மருத்துவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுபவர்  அமெரிக்க அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன்.  இவர் அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட ‘பல் செட்டை’ அணிந்து இருந்ததாக மக்கள் நம்பினர் . ஆனால் அவர்  மாற்றுப் பற்கள் பொருத்தி இருந்தார்  என்றும்  யானை   தந்தங்களால்  செய்யப்பட்ட  பற்களையும்  தங்கத்தினால் செய்யப்பட்ட  பற்களையும்  பொருத்தி   இருந்தார்.

 கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்:

 பழைய நாகரிகங்களில்  ஒன்றான  மெசபடோமியாவில்  ஆட்சி  புரிந்த  ஹமுராபி  என்ற அரசன்  முதன்முதலில்  சட்ட நெறிமுறையை கல்வெட்டில்   பொறித்து  வந்துள்ளது  கண்டறியப்பட்டுள்ளது. இதில்  ஒருவர் குற்றம் செய்தால்  அதற்கு தண்டனையாக  அவர்களின் உறுப்புகளை வெட்டி எடுப்பதை  பழக்கமாகக் கொண்டு இருந்துள்ளனர்.  அதனை  சட்ட நெறிப்படுத்தி  கல்வெட்டில்  பொறிக்கப்பட்டுள்ளது.  இதனைக் குறிக்கும் விதமாக  "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்"  என்று  எழுதப்பட்டுள்ளது.  இன்றளவும்  மக்களிடத்தில் இந்த சொலவடை  பயன்பாட்டில் உள்ளது.

 பல  துறைகளின்  வரலாறுகளை  அறிவோம்! வருங்காலத்தைப் படைப்போம்! நிகழ்காலத்தில்  நலமுடன் வாழ்வோம்!

doctor

 
டாக்டர் செந்தில் குமார், MDS ( வாய், தாடை, முகம் அறுவை சிகிச்சை நிபுணர் )
மூத்த உதவிப் பேராசிரியர்,
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை.