வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (10:39 IST)

அலைபேசிகளை நிறுத்திவிடுங்கள்! குழந்தைகளுடன் ஒருமணிநேரம் செலவிடுங்கள்!

பேரண்ட் சர்க்கிளின் இந்த முயற்சி குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர். எஸ்.கண்ணப்பன் பகிரும் கருத்துக்கள்

தன் சொந்தக் குழந்தை யாரென்று புத்திசாலித் தந்தைக்குத் தெரியும் என்பார் வில்லியம் ஹேக்ஸ்பியர். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்கள் குழந்தைகளும் இருப்பர். எனவே அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படியே நீங்களும் இருங்கள். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதைக்காட்டிலும் மிக முக்கியமான வேலை வேறு என்ன இருந்துவிட முடியும். " உங்கள் குழந்தைகளுடன் ஒருமணி நேரம் செலவிட்டுப் பாருங்கள். பின்னர் நீங்கள் அதன் உள்ளத்தை உணர்ந்து கொள்வீர்கள், குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளதால் அலுவலக வேலைகள் பெற்றோரின் முன்னுரிமையாக உள்ளது. பெற்றோரின் பெரும்பான்மையான நேரத்தை இதுவே எடுத்துக்கொண்டு விடுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கையின் மதிப்பு மிக்க விஷயமே அவர்களது குடும்பம்தான் என்பதை பெற்றோர் இனிமேலாவது உரவேண்டும்.
 

குழந்தைகள் படிக்கும்போது அவர்களின் கூட இருந்து வழிநடத்த பெற்றோர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் படிப்புக்காக ஒதுக்குகின்ற நேரத்தைப் போலவே அவர்களுடன் விளையாடவும் நேரம் ஒதுக்கவேண்டும். முடிந்தால் அவர்களின் படிப்புக்கு உதவுவதற்காக செலவிடும் நேரத்தைவிட அதிகமான நேரத்தை அவர்களுடன் விளையாடுவதற்காகப் பெற்றோர் ஒதுக்கவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பமாகும். விளையாடுவது. ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது போன்றவை குடும்ப உறுப்பினர்களிடையே ஒரு நெருக்கமான உறவை உண்டாக்கும். குழந்தைகள் ஒன்றாக விளையாடும் போது, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு அவர்களின் மன அழுத்தமும் குறைகிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட உரையாடல்களை நிகழ்த்தும் வாய்ப்பையும் பெறுகின்றனர். மகிழ்ச்சியான நிகழ்வுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது அவர்கள் ஒன்றிணைந்து அழகான குடும்பத்தை உருவாக்குகின்றனர்

குறிப்பாக குழந்தைகள் பெற்றோருடன் அதிக நேரம் விளையாடும் போது குழந்தைகள் அவர்களிடமிருந்து அதிக அறிவைப் பெறுகின்றனர். ஏனென்றால் விளையாடுவது என்பது வெறும் கேளிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல் பெற்றோர் தங்களது அறிவையும் அனுபவங்களையும் தங்கள் குழத்தைகளிடம் கடத்துவதற்க்கான களமாகவும் அமைந்துவிடுகிறது அதனால் மின்னணு சாதனங்கள் இல்லாமல் இந்த ஒருமணிநேரத்தை உங்கள் குழத்தைகளுடன் செலவிடுங்கள். இதுவே ஒரு நல் ஆரம்பமாக இருக்கட்டும்.

பின்னர் இதையே தினமும் ஒருமணி நேரப் பழக்கமாகவும் மாற்றுங்கள்.