அமேசானுக்கு எதிராக இந்திய அளவில் போராட்டம்! – வணிகர் சங்கம் அறிவிப்பு!

amazon
Prasanth Karthick| Last Modified திங்கள், 4 நவம்பர் 2019 (19:01 IST)
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக இந்திய அளவில் போராட்டம் நடத்த போவதாக இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னனி ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஏகப்பட்ட பொருட்களை தள்ளுபடியில் விற்று தீர்த்தன. இதன்மூலம் மொத்தம் 19000 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆன்லைன் விற்பனை தளங்கள் அரசின் விதிமுறைகளை மீறி இஷ்டத்துக்கு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கியதாக இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. மேலும் இதுபோன்ற ஆன்லைன் தள்ளுபடிகளால் உள்ளூர் வியாபாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் முறையிட்டனர்.

இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு எந்தவித பலனும் கிடைக்காததால் எதிர்வரும் நவம்பர் 20 முதல் பல கட்ட போராட்டங்களை நடத்த வணிகர்கள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

அதன்படி நவம்பர் 20ம் தேதி இந்தியாவின் முக்கியமான 200 நகரங்களில் அனைத்து வணிகர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பிறகு நவம்பர் 25ம் தேதி 500 நகரங்களில் ஆன்லைன் விற்பனை தளங்களின் அத்துமீறலை கண்டித்து பேரணி நடத்தவும் முடிவெடுத்துள்ளனர். கடைசி போராட்டமாக நவம்பர் 28 அன்று 1000 நகரங்களில் ஊர்வலம் நடத்தவும், ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய வணிகர்கள் கூட்டமைப்பினர் “இந்திய வணிகர்களின் வணிக எல்லை மிகவும் சிறியது. பொருள் கொள்முதல், போக்குவரத்து என சகல செலவுகளும் போக சொற்ப லாபமே கிடைக்கிறது. அதற்கும் ஆபத்து வந்தால் இங்கே உள்ளூர் மார்க்கெட் என்பதே இல்லாமல் போய்விடும். இதுகுறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பேரணியை நடத்த உள்ளோம். மக்களும் இதில் கலந்து கொண்டு உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :