புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By VM
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (10:41 IST)

இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை தொட வாய்ப்பு...

உலகச்சந்தையில் தங்கத்தில் முதலீடு தொடர்ந்து அதிகரிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. தங்கத்தின் விலை கடந்த 10-ஆம் தேதி பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.24,608-யை தொட்டது. இதன்பிறகு சற்று விலை குறைந்திருந்தது. இந்நிலையில், தங்கத்தின் விலை திங்கள்கிழமை (ஜன.14) மீண்டும் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.96 உயர்ந்து, ரூ.24,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. தை மாதம் பிறந்த நிலையில், 
 
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுப நிகழ்ச்சிக்கு தங்க நகைகள் வாங்கும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி தங்கம் விலை உயர்வு ஏன் என்பது குறித்து கூறியது:  முதலீட்டாளர்கள் வர்த்தகம் சார்ந்த பங்குச்சந்தையில் முதலீடுசெய்யாமல், தங்கத்தில் முதலீடு செய்துவருகின்றனர். 
 
, சமீபகாலமாக, அமெரிக்க அதிபர் சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது, தொழில்துறையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, மற்ற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவர் பேசி வருகிறார். இந்த காரணங்களால்,உலக சந்தையில் தங்கத்தில் முதலீடு உயர்ந்து வருகிறது.இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன்காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 
 
அமெரிக்காவில் கடந்த வாரம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துக்கான குறியீடு சரிந்துள்ளது.அதனால், பெருமளவு முதலீடு தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாள்களில் தொடர்ந்து விலை உயரும். குறிப்பாக, இந்த மாத இறுதிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.