வியாழன், 21 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (14:04 IST)

பொங்கல் தினத்தன்று கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுகள்

தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாக்கள் பண்டிகைகள் சடங்கு சம்பிரதாயங்கள் உணவு இவற்றோடு மறக்கப்பட்ட நமது பாரம்பரிய விளையாட்டைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பொழுதுபோக்கு என்றால் ‘டிவி’ விளையாட்டு என்றால் கிரிக்கெட் எனச் சொல்லும் அளவிற்கு இன்றைய சிறுவர்களின் உலகம் இருக்கிறது. வாழ்க்கையின் முக்கியத்துவத்தை விவரிக்கும் விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க பெரியோர்களுக்கு நேரமில்லை. உடலுக்கு வலுவூட்டல் வளைந்து கொடுக்கும் தன்மை தைரியம் விரைவாக செயலாற்றல் மனசக்தி அறிவுத்திறன் மேம்பாடு, மனக்கூர்மை என எல்லா அம்சங்களையும் கொண்டது நமது பாரம்பரிய விளையாட்டுக்கள்.
ஒருவர் விளையாட்டில் ஈடுபடும் போதுதான் அவரின் பொறுமை நேர்மை ஒழுக்கம் கீழ்ப்படிதல் என அனைத்து நற்குணங்களையும் கண்டறிய இயலும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.  ஆனால் நமது பாரம்பரிய விளையாட்டுகளில் மட்டும் தான் நடுவர் விளையாடுபவர்கள் வேடிக்கை பார்ப்பவர்கள் ஆகிய அனைவரிடமும் தாக்கங்கள் ஏற்படும். மேற்கத்திய நாடுகளின் விளையாட்டுகளில் காணப்படாத பல அம்சங்களை பாரம்பரிய விளையாட்டுகளில் காணலாம். தமிழனின் பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் கூடி வாழும் இயல்பை வளர்த்துக் கொள்ளவும் வெற்றி தோல்விகளைச் சமமாக நினைக்கவும் கூடி விளையாடவேண்டும் என்ற அழுத்தமான செய்திகளை நமது முன்னோர்கள் வகுத்து சென்றுள்ளனர்.
இவற்றில் பொங்கல் தினத்தன்று கொண்டாடப்படும் ஒரு சில விளையாட்டுகளைப் பற்றி பார்ப்போம்.
 
பொங்கல் வந்தாலே விளையாட்டுப் போட்டிகள் களைகட்டும். சிறுவர்களுக்கு ஓட்டப்போட்டி, சாக்குப் போட்டி, மியூசிக் சேர் போன்றவை இருக்கும்.


இளம்பெண்களுக்கு தண்ணீர் குடம் சுமத்தல், கோலப்போட்டிகள் நடைபெறும். இளவட்டங்களுக்கு ஸ்லோ சைக்கிள்  ரேஸ், பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கபடி, ஜல்லிக்கட்டு என ஒவ்வொரு விளையாட்டும் உற்சாகமாக பொழுது போகும்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கொடுப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வசூல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
நாம் பெரும்பாடு பட்டு மீட்ட ஜல்லிகட்டை பற்றி ஒரு சில வரிகள்
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஜல்லிக்கட்டு நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறுதழுவல் விளையாட்டு விலங்குகளைத் துன்புறுத்துவதாகவும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகவும் பீட்டா என்ற அமைப்பு ஜல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு நடந்த மாபெரும் போராட்டத்தால் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டின் மீதான தடை நீக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு கொண்டாடப்பட்டது. வரும் பொங்களுக்கும் சீறிப்பாய ஜல்லிக்கட்டு காளைகள் தயாராகி வருகிறது.