இக்னோ வழங்கும் பயனுள்ள பாடத்திட்டங்கள்
இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் (IGNOU) கடந்த 20 ஆண்டுகளாக நம் நாட்டில் தொலை நிலைக் கல்வி மூலம் உயர்தரக் கல்வியை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் பெரும்பங்கு வகித்து வருகிறது.
தரமான உயர்தரக் கல்வியைக் குறைந்த கட்டணத்தில் நாடு முழுவதும், முக்கியமாக கிராமப்புறங்கள், கிராமப்புற பெண்கள், பின் தங்கிய வகுப்பினர், ஊனமுற்றோர் ஆகியோர்களுக்கு எடுத்துச் செல்வது மட்டுமின்றி, தகவல் தொடர்பு தொழில் நுட்ப முறைகளைக் கையாண்டு பாடங்களைக் கற்பிப்பதில் இப்பல்கலைக் கழகம் நம் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சிட்ட சுயமாகப் பயில உதவும் பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி ஒலி/ ஒளிப் பேழைகள், கல்விக்கான தொலைக்காட்சி சேனலான ஞான தர்ஷன், வானொலி ஞானவாணி, தொலைபேசி மூலம் நிகழும் வானொலி மற்றும் தொலைக்காட்சி உரையாடல்கள், இணைய வழி மூலம் கலந்துரையாடல் ஆகியன மாணவர்கள் பாடங்களை கற்பது மட்டுமின்றி, கருத்துப் பரிமாற்றம், செயல்திறன் வளர்ச்சி , மாணவர் சேவை ஆகியவற்றுக்குப் பெரிதும் உறுதுணையாக உள்ளன.
தங்கள் இருப்பிடத்திலிருந்தே மாணவர்கள் பாடங்களைக் கற்கத் தகவல் தொழில் நுட்பம் ஒரு சிறந்த கருவியாக இப்பல்கலைக்கழகத்தால் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் (இக்னோ) இந்தியா மட்டுமல்லாது 30 வெளி நாடுகளிலும் தன் சேவையைக் கொண்டு செல்கிறது. இப்பல்கலைக் கழகத்தில் தற்போது 13 லட்சம் மாணவர்கள் தொலை நிலைக் கல்வி மூலம் பயன்பெற்றுள்ளனர். மாணவர்களின் பாடம், நிர்வாகத் தொடர்பான சேவைகளைக் கருத்தில் கொண்டு 48 மண்டல மையங்கள், 6 உதவி மண்டல மையங்கள் மற்றும் 1300 கல்வி மையங்கள் இப்பல்கலைக் கழகத்தில் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன.
இந்த மண்டல மற்றும் கல்வி மையங்களின் உதவியுடன் மாணவர்களின் சேவை திறம்பட ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது இப்பல்கலைக்கழகத்தின் தனிச்சிறப்பாகும். இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இப்பல்கலைக் கழகம் தற்போது நாட்டின் தொலை நிலைக் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முனைவர், முது நிலை, இள நிலை , பட்டயம் மற்றும் சான்றிதழ் பாடத்திட்டங்களை மேலாண்மை, கணிப்பொறி போன்ற துறைகள் மட்டுமின்றி ஆசிரியர் கல்வி (பி.எட்), செவிலியர், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் வழங்கி வருகிறது. இந்தப் பாடத்திட்டங்கள் பலதரப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும் வகையில் அறிவு, தொழில் நுட்பம், செயல்திறன் மற்றும் தொடர்கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்னோ மண்டல மையம் - சென்னை1988
ம் ஆண்டு, 1520 மாணவர்கள் மற்றும் 6 கல்வி மையங்களுடன் தொடங்கப்பட்ட இம்மண்டல மையத்தில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்வேறு பாடத்திட்டங்களில் சேர்ந்து பயின்றிருக்கின்றனர். கல்வியாண்டு 2004-05ல் 26,000 மாணவர்கள் இம்மண்டலத்தின் மூலம் பயில பதிவு செய்துள்ளனர். தமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் பகுதிகளை உள்ளடக்கிய இந்த மண்டல மையத்தில் 94 கல்வி மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
சென்னை மண்டலத்தில் மேலாண்மை, கணிப்பொறி, செவிலியர், பி.எட் முதலிய துறைகளைச் சார்ந்த முதுநிலை, இளநிலை பட்டப்படிப்பு பாடத்திட்டங்கள் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கடந்த ஓராண்டுக்குள் இக்னோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடத்திட்டங்கள்:
கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் ஒருங்கிணைந்த முனைவர் பட்டம் (பி.எச்.டி).
வணிகவியல், வரலாறு, அரசியல் துறை படிப்புகளில் முது நிலைப் பட்டம்.
சமூகப்பணி மற்றும் கப்பல் பணியில் ( நாட்டிகல் சயன்° ) பட்டப்படிப்பு.
சுற்றுச் சூழல், தொடர் வளர்ச்சி மற்றும் அறிவுசார் காப்புரிமையில் முதுகலை பட்டப்படிப்பு.
காப்பி எடிட்டிங் / பிழை திருத்துதல் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு எழுதுதலில் பட்டயப்படிப்பு.
கைவினை மற்றும் வடிவமைப்புத்துறையில் சான்றிதழ் படிப்பு.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள்:மருத்துவத்துறையில் இதயம் (கார்டியாலஜி) சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் மேற்படிப்பு.
கண் தொடர்பான தொழில் நுட்பத்தில் பயிற்சித் துறையில் மேல் நிலைச் சான்றிதழ் படிப்பு.
மருத்துவத்துறை சார்ந்த கழிவு மேலாண்மை ( வே°ட் மேனேஜ்மெண்ட்) பட்டயம்.
செவிலியருக்கான தொழில் நுட்ப அறிவு மேம்பாட்டுப் பட்டயம்.
கணிப்பொறி சார்ந்த உற்பத்தித் துறையில் பட்டய மேற்படிப்பு.
காலணி தயாரிப்பில் பட்டயப்படிப்பு.
இருசக்கர வாகனத்துறையில் தொழில் நுட்பம் ஆற்றலில் மேம்பாடு.
ஊட்டச்சத்து மற்றும் உணவு படைத்தல் மேலாண்மையில் முதுகலைப்படிப்பு.
வேளாண்மைத்துறை கொள்கை சம்பந்தப்பட்ட முது நிலைப்படிப்பு.
உயிர் நுட்ப தகவல் துறையில் பட்டயப்படிப்பு.
நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு பற்றிய பட்டயப் படிப்பு.
பேரிடர் மேலாண்மைத் துறையில் பட்டயப்படிப்பு.
மகளிர்க்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் பட்டயப்படிப்பு.
உணவு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் படிப்பு.
ஆங்கிலப் புலமைப் படிப்பில் சான்றிதழ்.
முகவரி:இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக் கழகம்,
சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113.
தொலைபேசி: 044 2254 1919 ; 2254 2727.
இணையதள முகவரி: <www.ignou.ac.in>