மோடி பிரதமராவதை தமது கட்சி ஏற்றுக் கொள்ளும் - பரூக் அப்துல்லா
மோடி பிரதமராவதை தமது கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதலமைச்சர் உமர் அப்துல்லா ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உமர் அப்துல்லாவின் தந்தையான பரூக் அப்துல்லாவின் இத்தகைய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உமர் அப்துல்லாவின் முடிவை தாங்கள் செயல்படுத்தப் போவதாக கூறியுள்ள அவர், இறுதி முடிவை தமது மகனே எடுப்பார் என்றும் குறிப்பிட்டார். நரேந்திர மோடி வெற்றி பெறுவாரா இல்லை தோல்வி அடைவாரா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், நாட்டின் பிரதமரை மக்களே முடிவு செய்வார்கள் என்றார்.மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது மக்களின் விருப்பம் என்று கூறியுள்ள பரூக் அப்துல்லா, தேர்தல் முடிவை தேசிய மாநாட்டு கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.மக்களவை தேர்தலுக்கு முன்பாக காஷ்மீரில் 700 நிர்வாக மையங்களை உருவாக்க மாநில முதல்வர் உமர் அப்துல்லா திட்டமிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் இரு கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளாக உமர் அப்துல்லா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.