ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 2 நவம்பர் 2016 (16:57 IST)

கிண்டலுக்கு உள்ளான பெண் ஊழியரின் ’சோக பக்கங்கள்’!

பொதுத்துறை வங்கியில் மூத்த காசாளராக பணியாற்றும், மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த பிரேமலதா ஷிண்டே. இவர், மிக மந்தமாக செயல்படுவதாக, சமீபத்தில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ, ‘வைரலாக’ பரவியது.


 

இது குறித்து கறுத்து தெரிவித்திருந்த ஜெயமோகன், “நியாயப்படி இந்தக் கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல.
 
இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்” என்று கூறியிருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து தமிழகமெங்கும் எதிர்ப்பும், ஆதரவுமாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், மந்தமாக செயல்பட்ட அந்த வங்கி ஊழியரின் பரிதாபகரமான சோக பங்கங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், குந்தன் ஸ்ரீவஸ்தவா என்ற மனித உரிமை ஆர்வலர், ‘பேஸ்புக்’கில் வெளியிட்டுள்ள பதிவில், ”புனேவில் உள்ள, ‘பாங்க் ஆப் மகாராஷ்டிரா’ வங்கியில், மூத்த காசாளராக பணியாற்றும் பிரேமலதா ஷிண்டே, ஏற்கனவே இரு முறை, கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்; அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், அவரால், மிக மெதுவாகவே பணியாற்ற முடிகிறது. பிரேமலதா ஷிண்டே, அடுத்தாண்டு பிப்ரவரியில் ஓய்வு பெறவுள்ளார். அதுவரை, முழு சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் முடியும். ஆனால், கவுரவமாக பணியில் இருந்து அவர் ஓய்வு பெற எண்ணியுள்ளார்.
 
வழக்கமான, ‘கேஷ் கவுன்டர்’களுடன் கூடுதலாக, பிரேமலதா பணியாற்றுவதற்கு என்று தனி கவுன்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அவரால் இயன்ற வேகத்தில் பணியாற்ற, அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பிரேமலதா ஷிண்டேவின் கணவர் இறந்து விட்டார். மகன், வெளிநாட்டில் பணிபுரிகிறார். தனக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகளை அவராகவே, மருத்துவமனைக்கு சென்று செய்துகொள்கிறார். எனவே, யாரையும் கிண்டலடிக்கும் முன், அதன் மறுபக்கம் என்னவென்று தெரிந்து கொள்வது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.