இரண்டு வாரங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வினோத் காம்ப்ளி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டி மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக தனது வாழ்க்கையைத் தொடங்கியும் அவரால் அதை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியவில்லை. வினோத் காம்ப்ளியும் சச்சின் டெண்டுல்கரும் பள்ளி கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் விவேக் த்ரிவேதி “அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு கட்டிகள் உள்ளன. அவர் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும், அவர் இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளார்” எனக் கூறியுள்ளார். அவருக்கு அந்த மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவர் இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறும் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதீதமான குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.