1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

பதிரனா பந்து வீச அனுமதி மறுத்த நடுவர்கள்… தோனி வாக்குவாதம் – நடந்தது என்ன?

நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த குவாலிஃபயர் ஒன்று போட்டியில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து ஐபிஎல் வரலாற்றில் 10 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற பெருமை பெற்றதோடு 10 முறை ஒரு அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சென்னை அணி பந்துவீசிய போது சில நிமிடங்கள் போட்டி தடைபட்டது. அதற்குக் காரணம் நடுவர்கள் பதிரனா பந்துவீச அனுமதி மறுத்ததுதான். போட்டியில் 12 ஆவது ஓவரை வீசிவிட்டு ஓய்வெடுக்க டக்கவுட்டுக்கு சென்று விட்டார் பதிரனா. பின்னர் 9 நிமிடம் கழித்து வந்து 16 ஆவது ஓவரை வீச வந்தபோதுதான் அவரை பந்து வீச அனுமதி மறுத்தனர் நடுவர்கள்.

இதற்குக் காரணம் எந்த ஒரு வீரரும் ஓய்வெடுக்க சென்றால் 8 நிமிடத்துக்குள் திரும்ப வந்துவிட வேண்டும். அப்போதுதான் அவர் தொடர்ந்து பந்துவீச முடியும். ஆனால் பதிரனா 9 நிமிடம் கழித்துதான் களத்துக்கு வந்தார். இதற்கிடையே சிஎஸ்கே கேப்டன் தோனி நடுவர்களிடம் விவாதம் செய்து பின்னர் பதிரனாவை பந்துவீச வைத்தார். இதனால் போட்டி ஒரு நிமிடம் தடைபட்டு பின்னர் தொடங்கியது.