செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:35 IST)

என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு அதிர்ஷ்ட நாள் - கருண் நாயர் நெகிழ்ச்சி

தன்னுடைய வாழ் நாளில் இன்று சென்னையில் ஆடிய விளையாட்டு சிறப்பாக இருந்தது என்றும், இன்று தனக்கு மீண்டும் ஒரு அதிர்ஷ்ட நாள் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்தது மட்டுமல்லாமல் இந்திய அணி வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது.
 
இன்று, நான்காம் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக 71 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய கருண் நாயர் தொடர்ந்து சதம், இரட்டை சதம் என முன்னேற இறுதியாக முச்சதமும் அடித்து அசத்தினார். 
 
அறிமுக டெஸ்ட் தொடரிலேயே முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும், முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கருண் நாயர் பெற்றார். மேலும் டெஸ்ட் போட்டியில் ஒரு வீரரின் இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும். 
 
இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 759 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை சென்னை டெஸ்ட் மூலம் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த கருண் நாயர் “எனது வாழ்நாளிலேயே சென்னை டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பாக அமைந்தது. என் வாழ்நாளில் இன்று மீண்டும் ஒரு அதிர்ஷ்டநாள் என கருதுகிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடந்த ஜூலை மாதம் கேரளாவில் நான் படகு விபத்தில் சிக்கிய போது, கேரள மக்கள் என்னை காப்பாற்றினர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறினர்.