ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2024 (11:10 IST)

டி20 உலகப்கோப்பை..! முதல் போட்டியில் கனடாவை பந்தாடிய அமெரிக்கா..!!

America Won
டி20 உலகப்கோப்பை தொடரில் முதல் போட்டியில் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
20 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் ஜூன் 1-ம் தேதி தொடங்கி ஜூன் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6 மணியளவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா, கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய கனடா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில்  5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் அமெரிக்கா அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் டைலர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த கேப்டன் மொனாங் பட்டேல் 16 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரீஸ் கவுஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கவுஸ் 65 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜோன்ஸ் நிலைத்து விளையாடி ரன்களைச் சேகரித்தார்.

 
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 40 பந்துகளில் 4 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்களை குவித்தார். இதன் மூலம் 17.4 ஓவர் முடிவில் அமெரிக்கா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஆரோன் ஜோன்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.