வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (07:36 IST)

முதல் சில வாரங்களுக்கு ஐபிஎல் தொடரை இழக்கப் போகும் சூர்யகுமார் யாதவ்… மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு!

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் பீல்டிங் செய்த போது சூர்யகுமார் யாதவ்வுக்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவர் இந்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி அவரே இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “அனைவருக்கும் வணக்கம். பலரும் எனது உடல் பிட்னெஸ் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. நான் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா பிரச்சனைக்காக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது தீவிரமாக பழைய உடல்தகுதியைப் பெற உழைத்து வருகிறேன். விரைவில் உங்களைக் களத்தில் சந்திக்கிறேன்” எனக் கூறியிருந்தார். இப்போது என் சி ஏ வில் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் முழுமையாக குணமாக இன்னும் சில வாரங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்ததும் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில் அதற்கு அவர் முக்கியமான வீரராக இருப்பார் என்பதால் அவரை ஐபிஎல் தொடருக்காக அவசரப்படுத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் அவர் முதல் சில போட்டிகளை விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.